சாம்பியன் அர்ஜென்டீனாவை வீழ்த்தி ஹாக்கி கால் இறுதியில் இந்தியா

டோக்கியோ: ஹாக்கி போட்டியில் நடப்பு ஒலிம்பிக் சாம்பியன் அர்ஜனெ்டீனாவை 3-1 என்ற கோல் கணக்கில்வீழ்த்தி இந்தியா  20வது முறையாக காலிறுதி போட்டிக்கு முன்னேறி உள்ளது. ஒலிம்பிக் போட்டியின் ஆடவர் ஹாக்கி  ஏ பிரிவில் உள்ள நடப்பு ஒலிம்பிக் சாம்பியன்  அர்ஜென்டீனாவை நேற்று இந்திய அணி எதிர்கொண்டது. காலிறுதி வாய்ப்பை உறுதி செய்ய 2 அணிகளுக்கும்  வெற்றி அவசியம் என்பதால்  இரு அணிகளும் தீவிரமாக மோதின.  இந்திய அணி கூடுதல் ஆதிக்கம் செலுத்தினாலும் முதல் 2 கால் பகுதிகளில் இரு அணிகளாலும் கோலடிக்க முடியவில்லை. அதனால் முதல் 30 நிமிடங்கள்  இரு அணிகளும் சமநிலையில் இருந்தன.

ஆனால் 3வது கால்பகுதியின் 43வது நிமிடத்தில் இந்திய வீரர்  வருண் குமார்,  கிடைத்த பெனால்டி வாய்ப்பை கோலாக மாற்றினார்.  அர்ஜென்டீனா முயற்சிகள் பலனளிக்காததால்,  3வது கால்பகுதி முடிவில்  1-0 என்ற கோல் கணக்கில் இந்தியா முன்னிலை பெற்றது. ஆனால் 4வது கால்பகுதி தொடங்கிய சிறிது நேரத்தில் அர்ஜென்டீனாவுக்கு  பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. அதை சரியாக பயன்படுத்திய அந்த அணியின்  ஸ்குத் கேசெல்லா ஆட்டத்தின் 48வது நிமிடத்தில் கோலடித்து அசத்தினார். அதனால் ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலைக்கு வந்தது. கூடுதல் கோல் அடித்து வெற்றியை வசப்படுத்த இரு அணிகளும்  மல்லுக்கட்ட ஆட்டத்தில் அனல் பறந்தது.  

அதனால் ஏற்பட்ட முட்டல் மோதல்களில் இரு  தரப்பு வீரர்களையும் பச்சை அட்டை காட்டி,  நடுவர் எச்சரிக்கை செய்தார். ஆனாலும் இரு தரப்பின் வேகம் குறையவில்லை. கூடுதல் வேகம் காட்டிய இந்திய வீரர்கள் ஆட்டம் முடியும் நேரத்தில் அடுத்தடுத்து கோலடித்து அசத்தினர். ஆட்டத்தின் 58வது நிமிடத்தில்  விவேக் சாகர் பிரசாத், 59வது நிமிடத்தில் ஹர்மன்பிரீத் சிங் ஆகியோர்  கோல் அடித்தனர். அடுத்த ஒரு நிமிடத்தில் எந்த அதிசயமும் நிகழததால் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி3-1 என்ற கோல் கணக்கில் நடப்பு சாம்பியன் அர்ஜென்டீனாவை வீழ்த்தியது. கூடவே ஒலிம்பிக் போட்டியில் 21வது முறையாக விளையாடும் இந்திய அணி 20வது முறையாக காலிறுதியை உறுதி செய்தது.

2வது இடத்தில் இந்தியா

இந்திய தான் விளையாடிய 4 ஆட்டங்களில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியும்,  நியூசிலாந்து, ஸ்பெயின், அர்ஜென்டீனா அணிகளிடம் வெற்றியும் பெற்றது. அதனால்  9 புள்ளிகளுடன் ஏ பிரிவில் 2வது இடத்தை உறுதி செய்துள்ளது. ஆஸி 12 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. எஞ்சிய ஒரு ஆட்டத்தில்  இந்திய அணி வெற்றி பெற்று, ஆஸி தோற்றாலும் அதிக கோல் அடிப்படையில் ஆஸி முதல் இடத்தில் தொடர வாய்ப்பு அதிகம். அதேபோல்  தலா 4 புள்ளிகளுடன் உள்ள ஸ்பெயின், நியூசிலாந்து,  அர்ஜென்டீனா ஆகிய  அணிகள் வெற்றிப் பெற்றாலும் முதல் 2 இடங்களை பிடிக்க வாய்ப்பு இல்லை.

 ஜப்பான் தனது கடைசி ஆட்டத்தில் இந்தியாவை அதிக கோல் வித்தியாசத்தில் வெல்வதுடன் மற்ற அணிகள் அதிக கோல் வித்தியாசத்தில் தோற்க வேண்டும். அப்படி அதிசயம் நிகழ்ந்தால் ஜப்பான் காலிறுதியில் கால் வைக்கும். அதேபோல் பி பிரிவில் நடப்பு உலக சாம்பியன் பெல்ஜியம் முதல் இடத்தை உறுதி செய்துள்ளது. மற்ற 3 இடங்களுக்கான போட்டியில் கனடாவை தவிர நெதர்லாந்து,  இங்கிலாந்து, ஜெர்மனி, தெ.ஆப்ரிக்கா அணிகள் நீடிக்கின்றன.

Related Stories:

>