மாபியா கும்பலுக்கு ஜாமீன் மறுத்ததால் வாக்கிங் சென்ற நீதிபதியின் மீது ஆட்டோவை மோதி படுகொலை: ஜார்க்கண்ட்டில் பயங்கரம்

தன்பாத்: ஜார்க்கண்ட் மாநிலத்தில் சாலையில் நடைபயிற்சி சென்ற நீதிபதியின் மீது ஆட்டோவை மோதி கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இக்கொலைக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஜார்க்கண்டில் தன்பாத் மாவட்ட கூடுதல் நீதிபதியாக இருந்தவர் உத்தம் ஆனந்த். இவர் எம்எல்ஏ சஞ்சீவ் சிங்குக்கு மிகவும் நெருக்கமான ரன்ஜய் சிங் கொலை வழக்கில், மாபியா கும்பலை சேர்ந்த இருவருக்கு ஜாமீன் வழங்க மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இவர் கடந்த புதன்கிழமை அதிகாலை நடைபயிற்சி சென்ற போது ஆட்டோ மோதியதில் படுகாயமடைந்து சாலையில் விழுந்தார். அவ்வழியே சென்றவர் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.  

இதனிடையே, நடைபயிற்சிக்கு சென்ற ஆனந்த் 7 மணி ஆன பிறகும் வீடு திரும்பாததால், அவரது குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர். அப்போதுதான், நீதிபதிக்கு நடந்த கொடூரம் தெரிய வந்தது. இச்சம்பவம் குறித்து தானாக முன்வந்து விசாரித்த ஜார்கண்ட் உயர் நீதிமன்றம், போலீசார் தாமதமாக வழக்கு பதிவு செய்ததற்கு கண்டனம் தெரிவித்தது. இதற்கிடையே, இக்கொலை சம்பவத்தை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரமணாவின் கவனத்திற்கு கொண்டு சென்ற உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் சங்க தலைவர் விகாஸ் சிங், `இச்சம்பவம் சிசிடிவி.யில் பதிவானதாக தெரியவில்லை. ஏற்கனவே நடக்க போகிறது என்பது தெரிந்து ஒருவரால் வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. இது கொலைதான். எனவே, இந்த வழக்கு விசாரணையை சிபிஐ.க்கு மாற்ற வேண்டும்,’ என்று கேட்டுக் கொண்டார்.

இதனை கேட்ட தலைமை நீதிபதி ரமணா, ``இந்த விவகாரம் தொடர்பாக ஜார்க்கண்ட் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியுடன் பேசி உள்ளேன்.  இந்த விவகாரம் கவனத்தில் எடுத்து கொள்ளப்படும்,’’ என்றார். இந்நிலையில், நீதிபதியின் மீது ஆட்டோவை ஏற்றி கொன்ற லகன் குமார் வர்மா, ராகுல் வர்மா என்ற 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்கள் குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளனர். அவர்கள் எதற்காக நீதிபதியை கொன்றார்கள் என்பது பற்றி தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த கொலை சம்பவத்தின் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி இருக்கிறது.

Related Stories: