அமெரிக்காவில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்கள் படிப்பை முடித்தவுடன் நாடு திரும்ப வேண்டும்: நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல்

வாஷிங்டன்: அமெரிக்காவில் தங்கி படிக்கும் வெளிநாட்டு மாணவர்கள், படிப்பதை முடித்ததும் அங்கேயே தங்கி வேலை செய்வதை தடை செய்வதற்கான மசோதா, அமெரிக்க நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவில் குடியமர்வு மற்றும் சுங்க அமலாக்க துறையின் கீழ் `விருப்ப வேலை பயிற்சி’ என்ற திட்டம் நடைமுறையில் உள்ளது. அதன்படி, அங்குள்ள பல்கலைக் கழகங்களில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்கள் பட்டப்படிப்பை முடித்த பின், 3 ஆண்டுகள் வரை அங்கு தங்கி பணிபுரிய அனுமதி அளிக்கப்படுகிறது.

இதன் மூலம், எச்1-பி விசா கிடைக்காத ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் `பயிற்சி மாணவர்கள்’ என்ற பெயரில், அமெரிக்கர்களின் வேலை வாய்ப்பை பறித்து வருவதாக ஆளும் குடியரசு கட்சியினர்.இதனால், வெளிநாட்டு மாணவர்கள் படிப்பை முடித்ததும் அங்கேயே தங்கி வேலை தேடுவதை  தடுப்பதற்காக,  ‘உயர் திறன் அமெரிக்கர்கள் நியதி சட்டம்’ கொண்டு வரப்பட உள்ளது. இதற்கான மசோதாவை அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஆளும் குடியரசு கட்சி எம்பி.க்கள் நேற்று முன்தினம் மீண்டும் தாக்கல் செய்தனர்.

இந்த சட்டம் அமலுக்கு வந்தால், அமெரிக்காவில் படிப்பை முடிக்கும் வெளிநாட்டு மாணவர்கள், அங்கு தங்கி வேலை தேட முடியாது. படிப்பை முடித்ததும் தங்களின் நாட்டுக்கு திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்படும். இந்த சட்டம் அமலுக்கு வந்தால், இந்திய மாணவர்கள் அதிகளவில் பாதிக்கப்படுவார்கள். இந்நாட்டில் சீனர்களுக்கு அடுத்தப்படியாக இந்தியர்கள்தான் அதிகளவில் படித்து வருகின்றனர்.

Related Stories: