மீண்டும் தாக்குதல் தீவிரம் உலகளவில் கொரோனா பாதிப்பு 8% அதிகரிப்பு

ஐநா: உலகளவில் குறைந்து கொண்டிருந்த கொரோனா பாதிப்பு, பலி எண்ணிக்கை சமீப காலமாக மீண்டும்  அதிகரித்து வருகிறது. உலகளவில் தற்போது 115க்கும் மேற்பட்ட நாடுகளில், இந்தியாவில் உருமாற்றம் அடைந்த டெல்டா வைரஸ் பரவி வருகிறது. இதனால் குறைந்து கொண்டிருந்த பாதிப்பு, பலி எண்ணிக்கை மீண்டும் உயரத் தொடங்கி இருக்கிறது. உலகளவில் கடந்த  ஒரு வாரத்தில் மட்டுமே  69 ஆயிரம் பேர் இறந்துள்ளனர்.  இவற்றில் பெரும்பாலானவை அமெரிக்காவிலும், தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும்  ஏற்பட்டுள்ளன. உலகளவிலான கொரோனா புதிய பாதிப்பு, கடந்த வாரத்தை விட இந்த வாரத்தில் 8 சதவீதம் அதிகமாகி உள்ளதாக உலக சுகாதார அமைப்பு நேற்று தெரிவித்தது.

அமெரிக்கா, பிரேசில், இந்தோனேசியா, இங்கிலாந்து, இந்தியாவில் புதிய பாதிப்பு அதிகமாகி வருவதாக உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.  உலகளவி்ல் இப்போது வரையில் பாதிப்பு, பலியில் அமெரிக்கா தொடர்நது  முதலிடத்தில் இருந்து வருகிறது. இந்நாட்டில் இதுவரையில் 3 கோடியே 46 லட்சத்து 68 ஆயிரத்து 545 பேர் பாதித்துள்ளனர். 6 லட்சத்து 11 ஆயிரத்து 779 பேர் இறந்துள்ளனர். 3.14 கோடி பாதிப்புகள், 4.22 லட்சம் பலியுடன் இந்தியா 2வது இடத்தில் உள்ளது.

விரைவில் 20 கோடி: உலகம் முழுவதும் தற்போது மொத்த பாதிப்பு எண்ணிக்கை 19 கோடியே 58 லட்சமாகவும், பலி எண்ணிக்கை  41.85  லட்சமாகவும் உள்ளது. தற்போது அதிகரித்து வரும் பாதிப்பு இதே வேகத்தில் சென்றால், அடுத்த 2 வாரத்தில் பாதிப்பு எண்ணிக்கை 20 கோடியை தொட்டு விடும்.

Related Stories: