அறுந்து கிடந்த மின்சார வயரில் மிதித்தபோது பசுவை காப்பாற்ற முயன்ற விவசாய தொழிலாளி மின்சாரம் தாக்கி சாவு

ஆரணி : ஆரணி அருகே அறுந்து கிடந்த மின்சார வயரில் மிதித்த பசு உயிரிழந்தது. பசுவை காப்பாற்ற முயன்ற விவசாய தொழிலாளி மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் சிறுவன் உட்பட 7 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். திருவண்ணாமலை மாவட்டம்  ஆரணி அடுத்த களம்பூர் அருகே உள்ள மலையாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் பெருமாள் (75),  விவசாய கூலித்தொழிலாளி. இவருக்கு தேவகி என்ற மனைவியும் ஒரு மகன் மற்றும் ஒரு மகளும் உள்ளனர்.

இந்நிலையில் நேற்று காலை பெருமாள், தனது பசுவை ஓட்டிக்கொண்டு அங்குள்ள விளைநிலத்தை கடந்து சென்றார். அப்போது அங்கு அறுந்து கிடந்த மின்வயரை அவரது பசு மிதித்து துடிதுடித்து இறந்தது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த பெருமாள், கூச்சலிட்டார். அங்கு நிலத்தில் வேலை செய்துகொண்டிருந்த தொழிலாளர்களை உதவிக்கு அழைத்தார். அதன்பேரில் அவர்கள் ஓடிவந்தனர். அதற்குள் பெருமாள் தனது மாட்டை மீட்க முயன்றார். ஆனால் அவரும் மின்சாரம் தாக்கி தூக்கிவீசப்பட்டு பலியானார்.

இதனால் அங்கு ஓடிவந்த சிறுவன் உட்பட 7 பேரும் மின்சாரம் பாய்ந்து இறந்த பெருமாளை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். மேலும் பெருமாளையோ பசுமாட்டையோ இவர்கள் 7 பேரும் தொடாததால் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். இதுகுறித்து பொதுமக்கள் களம்பூர் போலீசார் மற்றும் மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அங்கு மின்சாரம் நிறுத்தப்பட்டது.

மேலும் போலீசார் சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்து வந்து சடலத்தை மீட்டு ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து  போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அங்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories:

>