உலோகத் திருமேனிகள் பாதுகாப்பு மையங்களில் ஐம்பொன் சிலைகளை பாதுகாப்பது எப்படி?

* வழிகாட்டி நெறிமுறை வெளியீடு

* ஆணையர் குமரகுருபரன் உத்தரவு

சென்னை: உலோகத் திருமேனிகள் பாதுகாப்பு மையங்களில் வைத்து சிலைகளை பாதுகாப்பது தொடர்பாக வழிகாட்டி நெறிமுறைகளை அறநிலையத்துறை வெளியிட்டுள்ளது. அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன், அனைத்து கோயில் அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள பாதுகாப்பு இல்லாத கோயில்களின் விலைமதிப்பில்லாத உலோக திருமேனிகளை பாதுகாக்கும் பொருட்டு, 34 உலோக திருமேனி பாதுகாப்பு மையங்களில் கட்டப்பட்டு, அதில் 23 பாதுகாப்பு மையங்கள் செயல்பாட்டில் உள்ளன. இத்துறை மூலம் கட்டப்பட்டுள்ள உலோகத் திருமேனிகள் பாதுகாப்பு மையங்களில் வைத்து சிலைகளை பாதுகாப்பது தொடர்பாக வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

* உலோக திருமேனி மையங்களில் கண்காணிப்பு கேமரா, கள்வர் எச்சரிக்கை மணி பொருத்தப்பட வேண்டும். கள்வர் எச்சரிக்கை மணி ஒலிக்கும் போது குறுஞ்செய்தி செயல் அலுவலர் (சம்பந்தப்பட்ட கோயில்), மணியம், இரண்டாம் பூட்டு அலுவலர், உள்ளூர் காவல்நிலையம், தக்கார் ஆகிய 5 பேருக்கு செல்லும் வகையில் இணைப்பு ஏற்படுத்த வேண்டும். மேலும், உலோகத் திருமேனி பாதுகாப்பு மைய கள்வர் எச்சரிக்கை மணி மற்றும் கண்காணிப்பு கேமரா செயல்படுகிறதா என்பதை செயல் அலுவலர்கள் அவ்வபோது ஆய்வு செய்ய வேண்டும்.

* பாதுகாப்பு மையத்தில் காவல்துறை மூலம் காவலர்கள் நியமனம் செய்யப்பட வேண்டும். 8 மணி நேரத்திற்கு 2 காவலர்கள் வீதம் 6 காவலர்கள் சுழற்சிமுறையில் பணியில் ஈடுபடுத்தப்பட வேண்டும்.

* காவல்துறை பணியாளர் இல்லையெனில் உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளரை அணுகி காவலர்களை பணியில் நியமனம் செய்ய உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

* இரட்டை பூட்டு முறையில் இரண்டாம் பூட்டு அலுவலர் முன்னிலையில் பாதுகாப்பு மையம் திறக்கப்பட வேண்டும். மையம் திறக்கப்படும் நேரம், சாத்தப்படும் நேரம் பதிவேட்டில் பதிவு செய்யப்பட வேண்டும்.

* உலோக திருமேனி பாதுகாப்பு மையத்தை கண்காணிக்க, பொறுப்பு அலுவலராக ஆய்வர், செயல் அலுவலர் நிலை-2, உதவியாளர், அலுவலக உதவியாளர், இரவு காவலர் நியமனம் செய்யப்பட வேண்டும்.

* பாதுகாப்பு மையத்தில் உள்ள உலோக திருமேனிகள் திருவிழாவிற்காக எடுத்து செல்லப்டும் போது மண்டல இணை ஆணையரின் அனுமதியின் பேரில் உரிய பாதுகாப்புடன் எடுத்து செல்ல வேண்டும்.

* பாதுகாப்பு மையத்தில் தெய்திருமேனிகள் எடுத்து செல்ல அனுமதிக்கும் போது அதன் உயரம், அகலம், எடை மற்றும் திருமேனி தன்மை, இணை ஆணையரின் உத்தரவு ஆகியன பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும். அனைத்து தெய் திருமேனிகள் புகைப்படம் எடுக்கப்பட்டு கணினியில் பாதுகாக்கப்பட வேண்டும்.

* பாதுகாப்பு மையத்தில் மூன்றம் நபர்களை அனுமதிக்க கூடாது.

* பாதுகாப்பு மையத்தில் உள்ள தெய்வ திருமேனிகளுக்கு வாரம் இரண்டு முறை பூஜை செய்து நெய்வேத்தியம் செய்யப்பட வேண்டும்.

* பாதுகாப்பு மையத்தில் பதிவேட்டின்படி சிலைகள் சரியாக உள்ளதா என பிரதிமாதம் செயல் அலுவலர், இரண்டாம் பூட்டு அலுவலர், மைய கண்காணிப்பாளர் முன்னிலையில் மண்டல ்இணை ஆணையர் ஆய்வு செய்ய வேண்டும். மையத்தில் உள்ளும், வெளியிலும் புகைப்படம எடுக்க அனுமதிக்க கூடாது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: