வில்வித்தையில் தீபிகா அசத்தல்

டோக்கியோ ஒலிம்பிக்சில் இந்தியாவுக்கு பதக்க நம்பிக்கையை விதைத்திருந்த வில்வித்தை போட்டியில் இதுவரை ஏமாற்றமே மிஞ்சியிருந்தாலும், மகளிர் தனிநபர் பிரிவில் தீபிகா குமாரி அடுத்தடுத்த சுற்றுகளில் வென்று 3வது சுற்றுக்கு  முன்னேறி பதக்க வாய்ப்பை தக்க வைத்துள்ளார். அவர் நேற்று முதல் சுற்றில் அசத்தலாக விளையாடி பூடான் வீராங்கனை கர்மாவை 6-0 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தினார். தொடர்ந்து 2வது சுற்றில் 6-4 என்ற புள்ளிக் கணக்கில் அமெரிக்க வீராங்கனை ஜெனீபர் பெர்ணாண்டசை வென்று 3வது சுற்றுக்கு முன்னேறினார். தீபிகா விளையாட உள்ள 3வது சுற்று நாளை நடைபெற உள்ளது.

வீரர்கள் ஏமாற்றம்: வில்வித்தை ஆண்கள் தனிநபர் பிரிவு முதல் சுற்றில் இந்திய வீரர் தருண்தீப் ராய் 6-4 என்ற புள்ளி கணக்கில் உக்ரைன் வீரர் ஒலெக்சி ஹன்பின்னை தோற்கடித்தார். இதனால் எதிர்பார்ப்பு அதிகரித்த நிலையில், 2வது சுற்றில் அவர் 5-6 என்ற புள்ளி கணக்கில் இஸ்ரவேல் வீரர் இடே ஷன்னியிடம் போராடி தோற்றார். மற்றொரு இந்திய வீரர் பிரவீன் ஜாதவ் தனது முதல் சுற்றில் 6-0 என்ற புள்ளிக் கணக்கில் ரஷ்ய ஒலிம்பிக் கமிட்டி வீரர் கெல்சன் பஜார்ஜாபோவை வீழ்த்தினார். தொடர்ந்து 2வது சுற்றில் பிரவீன் 0-6 என்ற கணக்கில் அமெரிக்காவின் பிராடி எல்லிசன்னிடம் தோற்று வெளியேறினார். இந்த நிலையில், தீபிகா குமாரியின் கணவர் அதானு தாஸ் இன்று ஆண்கள் தனிநபர் பிரிவு முதல் சுற்றில் களமிறங்க உள்ளார். அவர் சீன தைபே வீரர் யூ செங் டங்கை எதிர்கொள்ள உள்ளார்.

Related Stories: