எல்லோரும் பதக்கம் பற்றியே கேட்கின்றனர்; நான் மனுபாக்கர் சாப்பிட்டாளா என கவலைப்படுகிறேன்: தாயார் சுமேதா உருக்கம்

புதுடெல்லி: ஒலிம்பிக் தொடரில் துப்பாக்கி சுடுதல் பிரிவில் நேற்று 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் கலப்பு ஆட்டங்கள் நடைபெற்றன. இதில் இந்தியா சார்பாக மனு பாக்கர் - சௌரப் சௌத்ரி ஜோடி மற்றும் அபிஷேக் வர்மா - யாஷாஸ்வினி சிங் ஜோடி கலந்து கொண்டு ஆடியது. இதில் முதல் ரவுண்டில் 8 இடங்களுக்குள் வரும் அணி 2வது ரவுண்டுக்கு செல்லும். இந்தியாவின் நம்பிக்கையாக இருந்த மனு பாக்கர் - சௌரப் சௌத்ரி ஜோடி முதல் ரவுண்டில் சிறப்பாக ஆடினர். முதல் ரவுண்டில் இரண்டு பேரும் மொத்தமாக 582 புள்ளிகள் எடுத்தனர்.

இதனால் முதல் இடம் பிடித்து இரண்டாவது சுற்றுக்கு தகுதி பெற்றனர். ஆனால் இரண்டாவது சுற்றில் 380 புள்ளிகள் மட்டுமே இவர்கள் பெற்றனர். இதனால் இரண்டாவது சுற்றில் 7ம் இடம் பிடித்து மனு பாக்கர் - சௌரப் சௌத்ரி ஜோடி தோல்வி அடைந்து வெளியேறி உள்ளது. மனுபாக்கர் தங்கம் வெல்வார் என எதிர்பார்த்து ஹரியானாவின் சர்கிதாத்ரியில் உள்ள அவரது வீடு முன் பத்திரிகையாளர்கள், மக்கள் குவிந்திருந்தனர். ஆனால் 2வது ரவுண்டில் மனுபாக்கர் வெளியேறியதால் அனைவரும் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

இதுபற்றி மனுபாக்கரின் தாய் சுமேதா கூறுகையில், ‘‘நாங்கள் கடந்த சில நாட்களாக தூக்கம் இன்றி காணப்பட்டோம். சில நேரங்களில் சாப்பிட கூட மறந்துவிட்டோம். எங்களை பொறுத்தவரை பதக்கம் வெல்லாவிட்டாலும் எங்கள் மகளின் மகிழ்ச்சி முக்கியமானது. 10 மீட்டர் ஏர் பிஸ்டல் தனிநபர் சுற்றில் துப்பாக்கி மக்கரால் தகுதி சுற்றில் அவர் 12வது இடத்தை பிடித்தார். போட்டி முடிந்த பின்னர் அவள் எங்களை அழைத்து தடுமாற்றத்தை விளக்கினாள். எல்லோரும் ஒரே ஒரு விஷயத்தைப் பற்றி மட்டுமே (பதக்கம்) கேட்கிறார்கள்.

ஆனால் அவள் சரியான நேரத்தில் உணவை சாப்பிட்டிருக்கிறாளா அல்லது அவள் தன்னை நன்றாக கவனித்துக் கொண்டிருக்கிறாளா என்று நான் கவலைப்படுகிறேன். நான் ஒரு தாய், மனுவுடனான எனது பிணைப்பு அவரது சாதனைகள் அல்லது போட்டியில் ஏற்பட்ட தோல்விகளால் பாதிக்கப்படுவதில்லை’’, என்றார்.

Related Stories: