கீழடி 7ம் கட்ட அகழாய்வு தளங்களை வீடியோவில் பதிவு செய்யும் பணி துவக்கம்

திருப்புவனம்: கீழடி ஏழாம் கட்ட அகழாய்வு தளங்களை வீடியோவாக பதிவு செய்யும் பணி தொடங்கியுள்ளது. சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடியில் ஏழாம் கட்ட அகழாய்வு பணி கடந்த பிப்ரவரி 13ம் தேதி தமிழக தொல்லியல் துறை இயக்குநர் சிவானந்தம், இணை இயக்குநர் பாஸ்கரன், தொல்லியல் ஆய்வாளர்கள் சுரேஷ், ரமேஷ், அஜய், காவ்யா தலைமையில் நடந்து வருகிறது. கீழடி, அகரம், கொந்தகை, மணலூர் உள்ளிட்ட நான்கு தளங்களில் 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அகழாய்வு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். கீழடி, அகரத்தில் தலா ஏழு குழிகளும், கொந்தகையில் ஐந்து குழிகளும், மணலூரில் மூன்று குழிகளும் தோண்டப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன.

ஒவ்வொரு கட்ட அகழாய்வின் போதும் செப்டம்பரில் அகழாய்வு நிறைவு பெற்ற பின் கண்டெடுக்கப்பட்ட பொருட்களை ஆவணப்படுத்தும் பணி நடைபெறும். ஏழாம் கட்ட அகழாய்வில் தற்போதே ஆவணப்படுத்தும் பணி தொடங்கியுள்ளது. கீழடியில் இதுவரை ஏழு குழிகளில் மூடியுடன் கூடிய பானை, சுடுமண் பகடை, கல் உழவு கருவி, பானை ஓடுகள், சிறிய பானை, சுடுமண் கிண்ணங்கள், கட்டிட சிதறல்கள், உறைகிணறு உள்ளிட்டவைகள் கண்டறியப்பட்டுள்ளன. அகழாய்வில் கிடைத்த அசையும் பொருட்கள் எடுக்கப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டன. அசையா பொருட்களான உறைகிணறுகள், பானைகள், சுடுமண் கிண்ணங்கள் உள்ளிட்டவைகளை வீடியோவாக பதிவு செய்யும் பணி தொடங்கியுள்ளது.

பொருட்கள் கிடைத்த குழிகள், பொருட்கள் இருக்கும் இடம் உள்ளிட்ட அனைத்தும் வீடியோவாக பதிவு செய்யப்பட்டு இணையதளத்திலும் தொல்லியல் துறை சார்பில் வெளியிடப்பட உள்ளது. இதற்காக தொல்லியல் துறையின் வீடியோ பிரிவு பறக்கும் கேமராவால் பதிவு செய்யப்பட்டு வருகிறது. 2600 ஆண்டுகளுக்கு முன் பண்டைய கால மக்களின் வாழ்விடங்கள், பயன்படுத்திய பொருட்கள் உள்ளிட்ட அனைத்தும் வீடியோவாக பதிவு செய்யப்பட உள்ளன. கீழடியை தொடர்ந்து அகரம், கொந்தகை, மணலூர் உள்ளிட்ட தளங்களிலும் பணி நடைபெற உள்ளது.

Related Stories: