போடி வனச்சரகத்தில் பணியாற்றும் தீ தடுப்பு காவலர்கள் சம்பளம் கேட்டு மனு

தேனி : போடி வனச்சரகத்தில் தீ தடுப்பு காவலர்களாக பணிபுரிவோர் சம்பளம் கேட்டு டிஎப்ஓ அலுவலகத்தில் மனு அளித்தனர்.

போடி வனச்சரகத்திற்கு உட்பட்ட குரங்கணி, டாப் ஸ்டேஷன், சென்ட்ரல் ஸ்டேஷன் முதுவாக்குடி, சோலையூர் ஆகிய மலை வனப்பகுதியில் தீ தடுப்பு மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு வழிகாட்டும் பணிக்காக இப்பகுதியைச் சேர்ந்த பழங்குடியின இளைஞர்கள் 22 பேர் நியமிக்கப்பட்டு 3  ஆண்டுகளுக்கும் மேலாக  பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு மாதம் ரூ.9 ஆயிரம் தொகுப்பூதியமாக வழங்கப்பட்டு வந்தது. இப்பணியாளர்கள் நேற்று தேனியில் உள்ள மாவட்ட வன அலுவலர் அலுவலகத்திற்கு வந்து வன அலுவலர் சுமேஷ் சோமனிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

இதுகுறித்து தீ தடுப்பு பணியாளர்கள் கூறுகையில், ‘‘எட்டாம் வகுப்பு முதல் டிப்ளமோ வரை படித்த மலைவாழ் பழங்குடியின இளைஞர்களான நாங்கள் கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக சூழல் சுற்றுலா மேம்பாட்டு குழு மூலம் சுற்றுலா வரக்கூடிய பயணிகளுக்கு வழிகாட்டிகளாகவும் மலைப்பகுதியில் தீத்தடுப்பு பணியிலும், இரவு நேர காவல் பணியிலும் ஈடுபட்டு வருகிறோம். எங்களுக்கு மாதம் ரூ.9 ஆயிரம் தொகுப்பூதியமாக வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு  கொரோனா காலத்தில் எங்களுக்கு  சம்பளம் வழங்கப்பட்டது. ஆனால் தற்போது கொரோனாவை   காரணங்காட்டி சம்பளம் மறுக்கப்பட்டு பணி வழங்காமல் நிறுத்தி உள்ளனர். எனவே எங்களுக்கு நிலுவையிலுள்ள சம்பளத்தை வழங்கவும் தொடர்ந்து பணி வழங்கவும் வேண்டும் என வன அலுவலரிடம் வலியுறுத்தி உள்ளோம்’’ என்றனர்.

Related Stories: