கடலாடி அருகே கண்மாயில் மருது சகோதரர்கள் சிலை கண்டெடுப்பு-வழிபட அனுமதிக்க கிராமமக்கள் கோரிக்கை

சாயல்குடி :  கடலாடி அருகே கண்மாயில் மருது சகோதரர்கள் உருவம் பொறிக்கப்பட்டிருந்த கற்சிலை கண்டெடுக்கப்பட்டது. சிலையை கிராமத்தில் வைத்து வழிபட அரசு அனுமதியளிக்க வேண்டும் என கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடலாடி அருகே உள்ளது சாத்தங்குடி வெள்ளாங்குளம் கிராமம். இங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அருகே கண்மாய் ஒன்று உள்ளது. கடந்தாண்டு பெய்த கனமழைக்கு கண்மாயில் தண்ணீர் நிரம்பியது. கோடைகாலம் என்பதால் தண்ணீர் வற்றி வருகிறது. இந்நிலையில் கண்மாயில் கற்சிலை ஒன்று கிடந்துள்ளது. இதனை இளைஞர்கள் மீட்டு எடுத்தனர்.

இது குறித்து தொல்லியல் ஆய்வாளர் விஜயராமு ஆய்வு செய்தார். மன்னர்கள் அணியக்கூடிய தலைப்பாகை, அணிகலன்கள், நெற்றியில் பெரிய பொட்டுடன் இருப்பது மருது சகோதர்கள் ஆவர், ஒரு மீட்டர் உயரம், அரை மீட்டர் அகலம், கால் மீட்டர் சுற்றளவு கொண்ட மருது சகோதாரர்கள் உருவம் பதித்த இச்சிலையில் இருவரின் இரண்டு கைகளும் வணங்கியபடி இருப்பதால், சிறந்த சிவன் பக்தர்களான இவர்களின் சிலை இவர்களால் உருவாக்கப்பட்ட அல்லது நன்கொடை வழங்கி திருப்பணி செய்யப்பட்ட கோயில்களின் மண்டப தூண்களில் பிரதிஷ்ட செய்யப்பட்டவையாக இருக்கலாம் என தெரிவித்தார்.

கிராம பெரியவர்கள் கூறும்போது, மன்னர்கள் ஆட்சி கால கட்டத்தில் பாண்டிய மன்னர்கள், சேதுபதி மன்னர்கள் ராமநாதபுரம் மாவட்டத்தில் ஏராளமான சிவன் கோயில்களை கட்டியுள்ளனர். இந்திய சுதந்திர போராட்டம் காலக்கட்டத்தில் சிவகங்கை, ராமநாதபுரம் ,விருதுநகர் ஒருங்கிணைந்து மதுரை என ஒரே மாவட்டமாக இருந்தது. அந்த காலக்கட்டத்தில் சிவகங்கை மன்னர்களான மருது சகோதர்கள் சிவன் கோயில்களை கட்டுவதற்கும், திருப்பணிகள் செய்வதற்கும் நன்கொடை வழங்கியுள்ளனர்.

இந்நிலையில் சாத்தங்குடி வெள்ளாங்குளம் கண்மாயும், மேலச்செல்வனூர் கண்மாயும் அருகருகே உள்ளது. மேலச்செல்வனூர் கண்மாய் கரையில் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பழமையான புலீஸ்வரர் எனும் சிவன்கோயில் உள்ளது. இக்கோயில் சில வருடங்களுக்கு முன்பு புதுப்பிக்கப்பட்டது. கோயில் புதுப்பிக்கும் பணியின் போது கோயில் இருக்கும் சேதமான சிலைகள், பழைய சிலைகளை கடல், கண்மாய், குளம் போன்ற நீர்நிலைகளில் போடப்படுவது வழக்கம். அதன்படி இந்த சிலை கண்மாயில் போடப்பட்டிருக்கலாம். சுதந்திர போராட்ட வீரர்களான மருதுசகோதரர்கள் சிலையை கிராமத்தில் வைத்து வழிபாடு செய்ய அரசு அனுமதியளிக்க வேண்டும் என்றனர்.

Related Stories: