கர்நாடகத்தின் அடுத்த முதல்வர் யார்?: மாநில அமைச்சர் முருகேஷ் நிரானி அல்லது எம்.எல்.ஏ. அரவிந்த் பெல்லத் தேர்வாக வாய்ப்பு..!!

பெங்களூரு: கர்நாடகத்தில் எடியூரப்பா ராஜினாமா செய்ததை தொடர்ந்து அடுத்த முதலமைச்சரை தேர்வு செய்வதற்கான பணிகளை பாஜக தொடங்கியுள்ளது. ஒன்றிய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத்ஜோஷி, மாநில அமைச்சர் முருகேஷ் நிரானி, பாஜக பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷ் மற்றும் எம்.எல்.ஏ. அரவிந்த் பெல்லத் ஆகியோரது பெயர்கள் அடுத்த முதலமைச்சருக்கான தேர்வு பட்டியலில் இருப்பதாக கூறப்படுகிறது. இதில் முருகேஷ் நிரானி, அரவிந்த் பெல்லத் ஆகிய இருவரும் முதலமைச்சர் பதவியில் இருந்து விலகிய எடியூரப்பாவின் லிங்காயத் சமூகத்தை சேர்ந்தவர்கள். எனவே இவர்களில் ஒருவர் முதலமைச்சராக தேர்வு செய்யப்பட வாய்ப்பு அதிகமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பாஜக மேலிட பொறுப்பாளர்கள் அருண் சிங் மற்றும் ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆகியோர் இன்று பெங்களூருவில் முதலமைச்சர் தேர்வு பற்றி கட்சி எம்.எல்.ஏக்களிடம் கருத்துக்களை கேட்க உள்ளனர்.

எம்.எல்.ஏக்கள் கருத்துக்களின் அடிப்படையில் முதலமைச்சர் யார் என்பதை பாஜக நாடாளுமன்ற குழு இறுதி செய்யும் என்று மேலிட பொறுப்பாளர் அருண் சிங் கூறியுள்ளார். இதனிடையே கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா ராஜினாமா செய்ததை அடுத்து அதிருப்தி அடைந்துள்ள ஆதரவாளர்கள் எடியூரப்பாவின் சொந்த தொகுதியான சிகரிபுரா உள்ளிட்ட இடங்களில் பாஜக தலைமையை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பெரும்பான்மையாக உள்ள லிங்காயத் சமூகத்தை சேர்ந்த பிரதிநிதியை தூக்கி எறிந்துவிட்டதாக கூறியுள்ள அவர்கள், இனி கர்நாடகத்தில் பாஜகவால் ஆட்சி அமைக்க முடியாது என்று கூறியுள்ளனர்.

Related Stories: