இந்தோனேஷியாவில் அதிர்ச்சி: நூற்றுக்கணக்கான குழந்தைகள் கொரோனா தொற்றால் பலி

ஜகார்த்தா: உலகம் முழுவதும் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி உள்ள டெல்டா வகை கொரோனா வைரஸ் கடும் பாதிப்புகளையும், உயிரிழப்புகளையும் ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் வரும் செப்டம்பரில் கொரோனா 3வது அலை தாக்கும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த அலையில் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுவார்கள் என எச்சரிக்கப்பட்டுள்ளதால், அவர்களுக்கென பிரத்யேக சிகிச்சை மையம் அமைக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், இந்தோனேஷியாவில் கடந்த வாரங்களாக கொரோனாவுக்கு நூற்றுக்கணக்கான குழந்தைகள் பலியாகி உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்தோனேஷியாவில் கடந்த நாட்களாக புதிதாக தொற்று பாதிப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

கடந்த வெள்ளிக்கிழமை மட்டும் சுமார் 50,000 பேர் புதிதாக தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,566 பேர் பலியாகி உள்ளனர். இதுவரை மொத்த 32 லட்சம் பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 83,000 பேர் பலியாகி உள்ளனர். கொரோனா பாதிப்பு புள்ளி விவரங்களின்படி, நாட்டின் மொத்த பாதிப்பில் 12.5% குழந்தைகளுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஜூன் 12ம் தொடங்கிய வாரத்தில் மட்டும் 150க்கும் மேற்பட்ட குழந்தைகள் தொற்றால் பலியாகி உள்ளனர். இதில் பாதிக்கும் மேல் 5 வயதுக்கும் உட்பட குழந்தைகள். கடந்த சில வாரங்களாகவே ஒவ்வொரு வாரமும் நூற்றுக்கணக்கான குழந்தைகள் உயிரிழந்து வருகின்றனர். குழந்தைகள் முதல் 18 வயதுக்கும் உட்பட்டவர்கள் சுமார் 800க்கும் மேற்பட்டவர்கள் பலியாகி உள்ளனர். இதில், பெரும்பாலும் இந்த மாதத்தில் உயிரிழந்தவர்கள். இதற்கு முக்கிய காரணம் குறைந்த தடுப்பூசி விகிதம். நாட்டில் 16% முதல் டோசும், 6% பேர் 2வது டோசும் போட்டுள்ளனர்.

Related Stories: