‘சூலூர் விமான நிலையத்துக்கு நிலம் எடுப்பு இல்லை’ ஐகோர்ட் உத்தரவை பட்டாசு வெடித்து மக்கள் கொண்டாட்டம்

சூலூர்: சூலூர் விமான நிலைய விரிவாக்கத்திற்காக கையகப்படுத்தப்பட்டதாக கூறப்பட்ட அப்பநாயக்கன்பட்டியில் நிலங்களை பத்திரப்பதிவு செய்ய தடை இல்லை என ஐகோர்ட் உத்தரவிட்டதை கிராம மக்கள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். கோவை சூலூர் விமானப்படை தள விரிவாக்கத்திற்காக விமான நிலையத்தை சுற்றியுள்ள கலங்கல், காங்கேயம்பாளையம், அப்பநாய்க்கன்பட்டி, சூலூர், காசிக்கவுண்டன்புதூர் மற்றும் திருப்பூர் மாவட்டம் பருவாய் பகுதிகளில் சுமார் 700 ஏக்கர் நிலம் கையகப்படுத்துவதாக கூறப்பட்டது. இந்த நிலங்களின் ஆவண பதிவு, பட்டா மாற்றம் போன்றவை 1989 முதல் நடைபெறவில்லை.

அரசு சார்பில் எந்த அறிவுப்பும் நில உரிமையாளர்களுக்கு வழங்காத நிலையிலும் பத்திரப்பதிவுகள் செய்ய முடியாமல் பெரும் சிக்கல் ஏற்பட்டது. இந்நிலையில், அப்பநாய்க்கன்பட்டி பகுதியில் வீட்டுமனை வாங்கி உள்ள 2 ஆயிரத்து 500 பேர் அடங்கிய கூட்டுக்குழு சார்பில் சென்னை உயர்நீதி மன்றத்தில் நிலங்கள் கையகப்படுத்துவது தொடர்பாக விளக்கமளிக்க மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கில் ஆஜரான அரசு தரப்பு, விமான நிலைய விரிவாக்கத்திற்கு நிலம் கையகப்படுத்தும் திட்டம் குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை. ஆனால், உயரமான மரங்கள் மற்றும் கட்டிடங்கள் கட்டுவதற்கு மட்டுமே தடை உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைக் கேட்ட நீதிமன்றம் சர்ச்சைக்குரிய நிலங்களை பத்திரப்பதிவு செய்வது, பட்டா மாறுதல் செய்வது, மனை இடங்களை விற்பது தொடர்பாக எந்த தடையும் இல்லை என தெரிவித்ததாக கூட்டுக் குழு வழக்கறிஞர் கனகராஜ் தெரிவித்தார். இந்த தீர்ப்பு அப்பகுதியில் வீடுகட்ட மனை வாங்கிய பொதுமக்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நேற்று தங்கள் மனையிடங்களைப் பார்வையிட்ட பொதுமக்கள் சுமார் 150க்கும் மேற்பட்டோர் அப்பநாய்க்கன்பட்டி பகுதியில் உள்ள வக்கீல் தோட்டத்தில் கூடி ஆலோசனை நடத்தினர். பின்னர், அவர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டனர்.

Related Stories: