குடும்ப பிரச்னையால் ஏற்பட்ட ஆத்திரம்; மனைவியை கொன்று எரித்த இன்ஸ்பெக்டர், காங். நிர்வாகி கைது: ஒன்றரை மாதத்திற்கு பின் சிக்கினர்

அகமதாபாத்: குஜராத்தில் குடும்ப பிரச்னையால் தனது மனைவியை கொன்று எரித்த இன்ஸ்பெக்டர் மற்றும் அவரது நண்பரான காங்கிரஸ் நிர்வாகியை போலீசார் கைது செய்தனர். குஜராத் மாநிலம் வதோதராவின் கர்ஜன் பகுதியை சேர்ந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் அஜய் தேசாய் என்பவரின் மனைவி ஸ்வீட்டி படேல் (37) என்பவர் மாயமானதாக, கடந்த ஒன்றரை மாதத்துக்கு முன் அவரது சகோதரர் போலீசில் புகார் அளித்தார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுகுறித்து அகமதாபாத் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் டி.பி.பாரத் கூறுகையில், ‘ஜூன் 4ம் தேதி வதோரா போலீஸ் இன்ஸ்பெக்டர் அஜய் தேசாய், தனது மனைவி ஸ்வீட்டி படேலுடன் சண்டையிட்டுள்ளார்.

அப்போது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் கைலப்பாக மாறிய போது, தனது மனைவியின் கழுத்தை நெரித்து அஜய் தேசாய் கொன்றுவிட்டார். சம்பவம் நடந்த போது, தம்பதியின் குழந்தை உறங்கிக் கொண்டிருந்தது. பின்னர், மனைவியின் உடலை போர்வையால் மூடி, தனது காரில் எடுத்துக் கொண்டு தனது நண்பரும், கர்ஜன் சட்டமன்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு தோற்ற கிரித் சிங் ஜடேஜா என்பவரின் உதவியை நாடினார். பின்னர் இருவரும் சேர்ந்து பரூச் அடுத்த அடாலி கிராமத்தில் கட்டப்பட்டு வரும் ஒரு ஓட்டலில்,  கொலை செய்யப்பட்ட ஸ்வீட்டி படேலின் உடலை எரித்தனர்.

அதன்பின், அடுத்தநாள் காலை 11.30 மணியளவில், தனது மனைவியின் சகோதரரை தொடர்பு கொண்ட இன்ஸ்பெக்டர் அஜய் தேசாய், மனைவி ஸ்வீட்டியைக் காணவில்லை என்று தெரிவித்துள்ளார். அதன்பின், அவர் போலீசில் புகார் அளித்தார். கிட்டதிட்ட ஒன்றரை மாதமாக ஸ்வீட்டி படேலை தேடிவந்த நிலையில், தற்போது அவர் கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. இந்த கொலை சம்பவம் தொடர்பாக வதோதரா போலீஸ் இன்ஸ்பெக்டர் அஜய் தேசாய், அவருக்கு உதவியாக இருந்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கிரித் சிங் ஜடேஜா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவ்வழக்கை, சிறப்பு புலனாய்வு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்’ என்றார்.

Related Stories: