விடுமுறை நாளான நேற்று திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்-வெளியூர் பக்தர்களின் வருகை அதிகரிப்பு

திருவண்ணாமலை : திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், விடுமுறை நாளான நேற்று ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஊரடங்கு தளர்வின் காரணமாக கடந்த 5ம் தேதி முதல்  பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனர். அதையொட்டி, கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  குறிப்பாக வெளியூர் மற்றும் ெவளி மாநில பக்தர்கள் வருகை கடந்த  சில நாட்களாக வெகுவாக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை அரசு விடுமுறை தினமான நேற்று ஏராளமான பக்தர்கள் தரிசனத்துக்காக அண்ணாமலையார் கோயிலில் திரண்டனர். மேலும் பவுர்ணமி தினத்தன்று கிரிவலம் செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது. எனவே பவுர்ணமி அன்று திருவண்ணாமலை வருவதை தவிர்த்து வெளியூர் மற்றும் வெளி மாநில பக்தர்கள் விடுமுறை தினமான நேற்று வந்திருந்தனர்.

அதனால் அண்ணாமலையார் கோயிலைச் சுற்றியுள்ள வடக்கு ஒத்தவாடை வீதி, தெற்கு மாட வீதி உள்ளிட்ட இடங்களில் 100க்கும் மேற்பட்ட கார்கள்  அணிவகுத்து நிறுத்தப்பட்டிருந்தன.

பக்தர்களின் வருகை அதிகரித்ததால், தரிசன வரிசை, ராஜகோபுரத்தை கடந்து வெளி பிரகாரம் வரை நீண்டிருந்தது.முகக்கவசம் அணிதல், கிருமிநாசினி மூலம் கைகளை தூய்மை செய்தல் போன்ற விழிப்புணர்வு கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். ஆனாலும், விரைவாக தரிசனம் செய்ய வேண்டுமென்ற பக்தர்களின் விருப்பத்தின் காரணமாக, தரிசன வரிசையில் சமூக இடைவெளி முறையாக பின்பற்றவில்லை.

ராஜகோபுரம் வழியாக தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்ட பக்தர்கள், பே கோபுரம் வழியாக வெளியே செல்ல ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஒரு வழிபாதை விரைவு தரிசனம் என்பதால், அமர்வு தரிசனம், சிறப்பு தரிசனம் ஆகியவை தொடர்ந்து ரத்து செய்யப்பட்டுள்ளது.மேலும், சுவாமி சன்னதி, அம்மன் சன்னதி தவிர மற்ற பிரகாரங்களுக்கு பக்தர்கள் செல்ல தொடர்ந்து தடை நீடிக்கிறது.

Related Stories: