43 சட்டங்களுக்கு ஒப்புதல் 4 ஆண்டுகள் நிறைவு செய்தார் ஜனாதிபதி

புதுடெல்லி: ஜனாதிபதியாக பொறுப்பேற்ற ராம்நாத் கோவிந்த் நேற்றுடன் 4 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். இது தொடர்பாக ஜனாதிபதி மாளிகை இ.புத்தகம் வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது: தற்போது 76 வயதான ராம்நாத் கோவிந்த், கடந்த 2017ம் ஆண்டு ஜூலை 25ம் தேதி நாட்டின் 14வது ஜனாதிபதியாக பதவியேற்றார். தனது பதவியில் இன்றுடன் அவர் 4 ஆண்டுகளை நிறைவு செய்தார். இந்த 4 ஆண்டுகளில் ஒன்றிய அரசின் 43 சட்டங்களுக்கு  ஒப்புதல் அளித்துள்ளார். மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் 23 சட்டங்களுக்கும் அனுமதி வழங்கியுள்ளார். முக்கிய பிரச்னைகள் குறித்து 23 வெளிநாட்டு தலைவர்களுடன் காணொலி வழியே விவாதித்திருக்கிறார்.   

தேசிய போர் வீரர்கள் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி இருக்கிறார். கர்நாடகாவில் ஜெனரல் திம்மய்யா அருங்காட்சியகத்தை திறந்து வைத்துள்ளார். அந்தமான் நிகோபாருக்கும் அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ளார். ஜனாதிபதி மாளிகையை நாட்டு மக்கள் அணுகும் வகையில் வகையில் எளிமையாக்கப்பட்டு உள்ளது. கடந்த பிப்ரவரி-மார்ச் மாதத்தில் மட்டும் 34,293 பேர் மொகல் தோட்டத்தை பார்வையிட்டுள்ளனர். 4,817 பேர் ஜனாதிபதி மாளிகையையும், 7,458 பேர் அருங்காட்சியகத்தையும் பார்வையிட்டுள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

* ஜம்மு காஷ்மீர் சென்றார்

கார்கில் வெற்றியின் 22ம் ஆண்டு  தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இந்த போரில் உயர் தியாகம் செய்த வீரர்களுக்கு இன்று லடாக்கின் டிராஸ் நகரில் அமைக்கப்பட்டுள்ள கார்கில் வீரர்கள் நினைவிடத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மரியாதை செலுத்துகிறார். இதற்காக, பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக 4 நாள் அரசு முறை பயணமாக நேற்று அவர் டெல்லியில் இருந்து விமானம் மூலம் ஸ்ரீநகர் சென்று சேர்ந்தார். நாளை ஸ்ரீநகரில் உள்ள காஷ்மீர் பல்கலைக் கழகத்தின் 19ம் ஆண்டு பட்டமளிப்பு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டம் வழங்குகிறார்.

Related Stories: