குன்னூர் மலைவாழ் மக்களுக்காக இலவசமாக 6 ஆட்டோ ஆம்புலன்ஸ் வழங்கிய ராதிகா சாஸ்திரி பெருமிதம்: பிரதமர் பாராட்டு என்னை ஊக்கப்படுத்துகிறது

குன்னூர்: குன்னூரில் மலை வாழ் மக்கள் பயன்பாட்டுக்காக  6 ஆட்டோ ஆம்புலன்ஸ் வாகனங்களை வழங்கியதற்கு பிரதமர் மோடி பாராட்டியது ஊக்கம் அளிப்பதாக தன்னார்வலரான ராதிகா சாஸ்திரி கூறினார். நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியை சேர்ந்தவர்  ராதிகா சாஸ்திரி. தன்னார்வலரான இவர் பல்வேறு நலத்திட்டங்களை பொதுமக்களுக்கு அளித்து வருகிறார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு  தன்னார்வலர்களுடன் இணைந்து  குன்னூர் அரசு லாலி மருத்துவமனைக்கு இலவசமாக ஆக்சிஜன் உற்பத்தி கொள்கலன்களை வழங்கினார். இதைத்தொடர்ந்து, தற்போது 6 ஆட்டோ ஆம்புலன்ஸ்களை குன்னூர், கோத்தகிரி பகுதி மலைவாழ் மக்களின் பயன்பாட்டிற்கு இலவசமாக வழங்கியுள்ளார். இந்த ஆட்டோ ஆம்புலன்ஸ் தமிழகத்தில் முதல் முறையாக நீலகிரி மாவட்டத்தில் தான் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

ஆட்டோ என்பதால்  குறுகிய பாதைகளில் எளிதில் நோயாளிகளை கொண்டு செல்ல பயன்படுத்த முடிகிறது. மேலும், இந்த ஆட்டோ ஆம்புலன்சில் ஆக்சிஜன் சிலிண்டர் உள்ளது. டிரைவருக்கு தனி பகுதி என்பதால் கொரோனா நோயாளிகளை எளிதில் அழைத்து செல்ல முடியும். ஆட்டோ ஆம்புலன்ஸ் வழங்கிய ராதிகா சாஸ்திரிக்கு பிரதமர் நரேந்திர மோடி மன் கி பாத் நிகழ்ச்சியில் நேற்று பாராட்டு தெரிவித்துள்ளார். இது குறித்து ராதிகா சாஸ்திரி கூறியதாவது: மத்திய  பிரதேச மாநிலம் ஜபல்பூரில் 6 ஆட்டோ ஆம்புலன்ஸ்  தலா ரூ.3.5 லட்சத்தில் தயாரிக்கப்பட்டது.

இதை குன்னூர், கோத்தகிரி மலைவாழ் மக்களின் பயன்பாட்டுக்கு இலவசமாக வழங்கினேன். சிறிய வண்டி என்பதால் எளிதில் குறுகலான இடங்களில் இருந்து சிகிச்சைக்காக நோயாளிகளை அழைத்து செல்ல முடியும். ஆக்சிஜன் சிலிண்டருடன் படுக்கை வசதி உள்ளது. தமிழகத்திலேயே ஆட்டோ ஆம்புலன்ஸ் இங்கு தான் அறிமுகப்படுத்தப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி என் சேவையை பாராட்டியது நான் நினைத்து பார்க்காத விஷயம். மிகவும் மகிழ்ச்சியாகவும், உற்சாகமாகவும் உள்ளது. இது நீலகிரி மாவட்ட மக்களுக்கு தொடர்ந்து உதவி செய்ய என்னை ஊக்கப்படுத்துகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

* எல்.முருகன் வாழ்த்து

மோடியின் பாராட்டை தொடர்ந்து மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை இணை அமைச்சர் எல்.முருகன், ராதிகா சாஸ்திரியை தொலைபேசியில்  தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார். பிறகு அவர் வெளியிட்ட டிவிட்டர் செய்தியில், ‘‘இந்தத் தன்னலமற்ற சேவை நீலகிரியில் வசிக்கும் மக்களை ஊக்குவிப்பதுடன் அந்தப் பகுதியில் சுகாதார வசதிகளையும் மேம்படுத்தும்’’ என குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: