மழை காரணமாக திருச்சி சாலையில் மரம் முறிந்து விழுந்தது-அரைமணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

கோவை :  கோவை மாவட்டத்தில் கடந்த ஒரு சில வாரங்களாக தென்மேற்கு பருவ மழை பெய்து வருகிறது. இதனால் பணிகளுக்கு செல்ல முடியாமல் பொதுமக்கள் பலர் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.  மேலும் சாலைகளில் தேங்கி நிற்கும் மழைநீரில் வாகனங்களை ஓட்ட முடியாமல் வாகன ஓட்டிகள் தத்தளித்து வருகின்றனர். மழை காரணமாக பொதுமக்கள் வீட்டிலேயே முடங்கிங்கியுள்ளதால் கடை வியாபாரிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மழை காரணமாக குளிர்ந்த காற்று வீசுவதால் பலர் காய்ச்சல், சளி போன்ற உபாதைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. கோவையில் உள்ள அவினாசி சாலை, திருச்சி சாலை, மேட்டுப்பாளையம் சாலை, சத்தி சாலை ஆகிய முக்கியமான சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

கோவையில் நேற்று காலை முதல் சாரல் மழை பெய்தது. இதன் காரணமாக திருச்சி சாலை அரசு மருத்துவமனை அடுத்து உள்ள தர்கா எதிரே உள்ள மரம் வேரோடு சாய்ந்தது. மரத்தின் கீழ் கார் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. ஆனால் அதிர்ஷடவசமாக யாரும் இல்லாத காரணத்தால் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.  மரம் சாய்ந்து விழுந்தது குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அங்கு வந்த 6 பேர் கொண்ட தீயணைப்பு வீரர்கள் ரம்பம் கொண்டு அரை மணி நேரத்தில் கிளைகளை வெட்டி அப்புறபடுத்தினர்.  மரம் விழுந்ததின் காரணமாக அரைமணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. போக்குவரத்து காவலர்கள் வாகனங்களை மாற்று பாதையில் அனுப்பி வைத்தனர்.

Related Stories: