சேதுபாவாசத்திரம் அருகே 3 மாதங்களாக தடைபட்ட நாட்டுக் கோழிசந்தை-மீண்டும் நடத்த பொதுமக்கள் வலியுறுத்தல்

சேதுபாவாசத்திரம் : தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே வாரந்தோறும் நடைபெறும் நாட்டுக்கோழி சந்தை கொரோனா வைரஸ் 2 வது அலை ஊரடங்கால் மூன்று மாதங்களுக்கு மேலாக தடைபட்டது.இதனால் அசைவப்பிரியர்கள் பரிதவித்து வருகின்றனர்.தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் பகுதிகள் அதிக கிராமங்களை உள்ளடக்கிய பகுதியாகும். இந்த பகுதிகளில் வீடுகளில் நாட்டுகோழி வளர்ப்பிற்கு வசதியாக அமைந்துள்ளது.

இதனை பயன்படுத்தி இங்குள்ள பெண்கள் அதிகம் பேர் தங்கள் வீடுகளில் சிறு தொழில் போல அதிகமாக நாட்டுக்கோழிகளை வளர்த்து வருகின்றனர். இந்த கோழிகளை தங்கள் சொந்த பயன்பாட்டிற்கு பயன்படுத்தியது போக மற்றவைகளை தமிழ் புத்தாண்டு,ஆடி பெருக்கு,ரம்ஜான்,தீபாவளி,பொங்கல் போன்ற பண்டிகை காலங்களிலும் மற்ற நாட்களில் வாரம் தோறும் சந்தைகளிலும் வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் விற்பனை செய்வதுடன் அதிலிருந்து கிடைக்கும் வருமானம் குழு கடன்,குடும்பசெலவு,பண்டிகை காலங்களுக்கும் பயன்பெறும் வகையில் அமைந்து விடும். இதனால் நாட்டு கோழி வளர்ப்பை கிராம பகுதி பெண்கள் அதிகம் விரும்பி செய்து வருகின்றனர்.

அப்படி வளர்க்கப்படும் கோழிகள் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமையில் பேராவூரணியில் நடைபெறும் வாரச்சந்தை தினத்தன்று தனியாக பூக்கொல்லை கடைவீதியில் வாரச்சந்தை போல் கோழி மட்டும் அதிக அளவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.ஆட்டுக்கறியைவிட மருத்துவ குணம் கொண்ட நாட்டுக்கோழி கறியையே அதிகம் பேர் விரும்பி சாப்பிடுகின்றனர்.இதனால் இங்கு சுற்று வட்டாரங்களில் உள்ள பொதுமக்கள் கோழி விற்பனை செய்யவும் வாங்குவதற்கும் ஞாயிற்று கிழமைகளில் அதிகளவில் குவிந்து வருவார்கள்.

மேலும் புதுக்கோட்டை, ஆலங்குடி,அறந்தாங்கி போன்ற பகுதிகளில் இருந்து வியாபாரிகள் விற்பனைக்காக மொத்தமாக வாங்கி ஏற்றி சென்றுவிடுவது வழக்கமாக நடைபெற்று வரும்.தற்போது ஆட்டுக்கறி கிலோரூ. 750 முதல் ரூ.800 வரை விற்பனை செய்யப்படுகிறது.ஆனால் உலகையே உலுக்கிவரும் கொரோனா வைரஸ் 2 வது அலையால் மத்திய மாநில அரசுகள் ஊரடங்கு அறிவித்துள்ளது.

ஒரு சில தளர்வுகள் அறிவித்திருந்தாலும் பேராவூரணி வாரச்சந்தை மட்டுமின்றி வாரந்தோறும் பூக்கொல்லையில் நடைபெறும் கோழிச்சந்தையும் சமூக இடைவெளியின்றி கூட்டம் கூடும் என்பதால் கடந்த 3 மாதங்களுக்கு மேலாக தடைபட்டுள்ளது. 10 சதவீதம் பேர் கூட ஆட்டுக்கறியை விரும்பமாட்டார்கள்.நாட்டுக்கோழி கிடைக்காமல் கோழி பிரியர்கள் பரிதவித்து வருகின்றனர்.அத்துடன் கறி விலை உயர்ந்துள்ள இந்த நேரத்தில் சந்தையின்றி கோழி விற்பனை செய்ய முடியாமல் தவிப்பதால் கிராம மக்கள், பெண்கள் சந்தை நடத்த வலியுறுத்தியுள்ளனர்.

Related Stories: