சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பெரும் சரிவு: பெட்ரோல், டீசல் விலை குறையுமா? பொதுமக்கள், லாரி உரிமையாளர்கள் எதிர்பார்ப்பு

சேலம்: சர்வதேச சந்தையில் கடந்த 10 மாதங்களாக இல்லாத வகையில் கச்சா எண்ணெய் விலை சரிந்துள்ளது. இதனால் கடந்த 5 நாட்களாக பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படாமல் உள்ளது. அடுத்தடுத்த நாட்களில் மேலும் விலை குறையுமா? என்ற எதிர்பார்ப்பு லாரி உரிமையாளர்கள், மக்களிடம் எழுந்துள்ளது.  

இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம் தொடக்கத்தில் இருந்தே பெட்ரோல், டீசல் விலை அடிக்கடி உயர்ந்து வருகிறது. ஜனவரியில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.68 முதல் ரூ.72 வரை விற்கப்பட்டது. டீசல் ரூ.60 முதல் ரூ.63 வரை விற்கப்பட்டது. அதன்பிறகு, பெட்ரோல், டீசல் விலை படிப்படியாக உயர்ந்து, சென்னையில் கடந்த 17ம் தேதி முதல் இன்று வரை பெட்ரோல் லிட்டர் ரூ.102.49 ஆகவும், சேலத்தில் ரூ.102.92 ஆகவும் விற்கப்படுகிறது. டீசல் விலையானது கடந்த 15ம் தேதி முதல் சென்னையில் ரூ.94.39, சேலத்தில் ரூ.94.83 என்று விற்கப் படுகிறது.

இந்நிலையில் கடந்த 8 நாட்களில் கச்சா எண்ணெய் விலை, பீப்பாய் 77.60 டாலரிலிருந்து 68.40 டாலராக குறைந்துள்ளது. இது கடந்த பத்து மாதங்களில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்ட மிகப்பெரிய சரிவாகும். கச்சா எண்ணெயின் விலை சரிவால் தற்போது பெட்ரோல் விலை 5வது நாளாகவும், டீசல் விலை ஏழாவது நாளாகவும் உயராமல், ஒரே சீராக விற்கப்பட்டு வருகிறது. இதனால் அடுத்தடுத்த நாட்களில் விலை மேலும் குறையுமா? என்ற எதிர்பார்ப்பு பொதுமக்களிடமும், லாரி உரிமையாளர்களிடமும் எழுந்துள்ளது. இதுகுறித்து சேலம் மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்க செயலாளர் தனராஜ் கூறியதாவது: இந்தியாவில் கடந்த 7 மாதத்தில் டீசல் விலை ரூ.25 வரை உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வால் லாரி உரிமையாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பல்லாயிரம் லாரிகள் இயக்கப்படாமல் உள்ளன. டீசல், சுங்கக்கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி, தென் மாநில லாரி உரிமையாளர் கள் பல கட்டங்களில் போராட்டம் நடத்தினர்.

ஆனால் மத்திய அரசு செவி சாய்க்கவில்லை. மே மாதத்தில் தென் மாநில அளவில் லாரிகள் வேலைநிறுத்தம் அறிவித்தோம். அதற்குள் 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டதால், லாரிகள் வேலை நிறுத்தம் ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் கொரோனா 2வது அலை பரவியது. இதில் பல்லாயிரம் லாரிகளுக்கு சரக்குகள் கிடைக்காமல் போனது. கடந்த ஐந்து மாதமாக லாரி உரிமையாளர்கள் பல்வேறு இன்னலுக்கு ஆளாகி வருகிறோம். பெட்ரோல், டீசல் விலையை 21 நாட்களில் ஒன்றிய அரசு குறைக்கவில்லை என்றால், தென் மாநிலங்களில் ஆகஸ்டில் லாரிகள் வேலைநிறுத்தம் செய்ய உள்ளோம். தற்போது கச்சா எண்ணெய் விலை பெருமளவில் குறைந்து வருகிறது. அதனால் பெட்ரோல், டீசல் விலையும் குறைய வேண்டும். தற்போதுள்ள விலையை லிட்டருக்கு ரூ.10 முதல் ரூ.15 வரை விலை குறைக்க வேண்டும். அப்போது தான் பொதுமக்களுக்கும், லாரி உரிமையாளர் களுக்கும் ஓரளவு சிரமங்கள் குறையும். ஒன்றிய அரசு இதற்குரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தனராஜ் கூறினார்.

Related Stories:

>