இங்கிலாந்து டெஸ்ட் தொடர்: காயம் காரணமாக இந்திய அணியின் ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் விலகல்..!

டெல்லி: இந்திய அணியின் ஆல்ரவுண்டர் வீரரும், தமிழகத்தைச் சேர்ந்தவருமான வாஷிங்டன் சுந்தர் காயம் காரணாக இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து விலகியுள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கெனவே காயம் காரணமாகத் தொடக்க வீரர் ஷுப்மான் கில், வேகப்பந்துவீச்சாளர் ஆவேஷ் கான் ஆகியோர் காயத்தால் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது சுந்தரும் பாதிக்கப்பட்டுள்ளார். ஆகஸ்ட் 4-ம் தேதி சவுத்தாம்டனில் முதல் டெஸ்ட் போட்டி தொடங்க இருக்கும் நிலையில், அடுத்தடுத்து வீரர்கள் காயத்தால் அவதிப்பட்டு வருகின்றனர்.

பயிற்சியின்போது வாஷிங்டன் சுந்தரின் விரலில் காயம் ஏற்பட்டுள்ளது. இந்தக் காயம் குணமடைய 6 வாரங்கள் வரை ஓய்வு தேவைப்படும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். ஆதலால், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சுந்தர் விளையாடமாட்டார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை பிசிசிஐ சார்பில் அதிகாரபூர்வமாகத் தெரிவிக்கவில்லை. இதற்கிடையே, வேகப்பந்துவீச்சாளர் ஆவேஷ் கானின் இடதுகை பெருவிரலில் பயிற்சிப் போட்டியின்போது காயம் ஏற்பட்டது.

இதனால், அவருக்கு ஏற்பட்ட காயம் குறித்து மருத்துவக் குழுவினர் பரிசீலித்து வருகின்றனர். அவர் விலகுவதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. அடுத்த சில நாட்களில் ஆவேஷ் கான் நிலையும் தெரியவரும். இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, துணை கேப்டன் ரஹானே இருவரும்கூட 100 சதவீதம் உடல் தகுதியுடன் இல்லை. இதனால்தான் இருவரும் பயிற்சிப் போட்டியில்கூட பங்கேற்காமல் விலகியுள்ளனர்.

கோலிக்கு முதுகுப் பகுதியில் பிடிப்பு இருப்பதால், ஓய்வில் இருக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். ரஹானேவுக்கு இடது மேல் தொடையில் தசைப்பிடிப்பு இருப்பதால் அவரையும் ஓய்வில் இருக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். தற்போது ஷுப்மான் கில், வாஷிங்டன் சுந்தர் இருவரும் ஏறக்குறைய டெஸ்ட் தொடரிலிருந்து விலகிவிட்ட நிலையில் எந்த இரு வீரர்களை இங்கிலாந்துக்கு பிசிசிஐ அனுப்பப்போகிறது என்பது பெரும் எதிர்பார்ப்பாக இருக்கிறது. பிரித்வி ஷா, மணிஷ் பாண்டே, ஹர்திக் பாண்டியா, குர்னல் பாண்டியா ஆகியோருக்கு அதிகமான வாய்ப்புள்ளது.

Related Stories:

>