திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வெளிநாட்டு கரன்சிகள் காணிக்கை குறைந்தது..!

திருமலை: கொரோனா பரவல் காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோயில் உண்டியலில் வெளிநாட்டு கரன்சி நோட்டுகளின் எண்ணிக்கை 94 சதவீதம் குறைந்தது. திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு ஆண்டு முழுவதும் உள்நாட்டு பக்தர்கள் மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் வந்து சுவாமியை தரிசனம் செய்கின்றனர். இவ்வாறு வரும் பக்தர்கள் தங்கள் வசதிக்கேற்ப பணம் மற்றும் நகை உள்ளிட்டவற்றை உண்டியலில் காணிக்கையாக செலுத்துகின்றனர். இவ்வாறு பக்தர்கள் செலுத்தும் காணிக்கை ஆண்டுக்கு ரூ.1,300 கோடி தேவஸ்தானத்திற்கு கிடைக்கிறது. இதேபோல் வெளிநாட்டு பக்தர்களும் கரன்சி நோட்டுகளை உண்டியலில் செலுத்துகின்றனர்.

அவ்வாறு கடந்த 2000ம் ஆண்டில் இருந்து 2020ம் ஆண்டு வரை 157 வெளிநாடுகளை சேர்ந்த கரன்சி நோட்டுகளை பக்தர்கள் உண்டியலில் செலுத்தினர். மலேசியா கரன்சி நோட்டுகள் 46 சதவீதம், அமெரிக்க டாலர் 16 சதவீதம், இலங்கை 11, சவுதி 6, கத்தார் 4, நேபால் 3 சதவீதம் மற்றும் பாகிஸ்தான் உள்ளிட்ட பல்வேறு வெளிநாட்டு கரன்சி நோட்டுகளை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர். ஏழுமலையான் கோயிலுக்கு 2019-2020ம் ஆண்டில் வெளிநாட்டு கரன்சி மூலமாக ரூ.27.49 கோடி வருவாய் வந்தது. ஆனால், இந்தாண்டு கொரோனா பரவல் காரணமாக வெளிநாட்டு பக்தர்கள் யாரும் வராத நிலையில் உண்டியல் கரன்சி நோட்டுகள் எண்ணிக்கை 94 சதவீதம் குறைந்துள்ளது என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

ரூ.1.89 கோடி காணிக்கை

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினமும் கொரோனா விதிமுறைகளை கடைபிடித்து ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட் மற்றும் விஐபி தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். நேற்று முன்தினம் 17 ஆயிரத்து 310 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். 7 ஆயிரத்து 37 பக்தர்கள் தலைமுடியை காணிக்கை செலுத்தினர். உண்டியலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை நேற்று முன்தினம் இரவு எண்ணப்பட்டது. அதில், ரூ.1.89 கோடி உண்டியல் காணிக்கையாக கிடைத்தது.

Related Stories: