மதுவிலக்கு அமலில் உள்ள பீகாரில் ஒன்றாக அமர்ந்து மது குடித்த பாஜக தலைவர்: எதிர்கட்சி தலைவர் கடும் கண்டனம்

மதுபானி: மதுவிலக்கு அமலில் உள்ள பீகாரில், பாஜக மாவட்ட தலைவர் ஒருவர், தனது கூட்டாளிகளுடன் அமர்ந்து மது குடிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.  பீகாரில் மதுவிலக்கு அமலில் உள்ள நிலையில், மதுபான கடத்தல் மற்றும் அதன் சட்டவிரோத விற்பனை, கள்ளச்சாராயம் குடித்து மக்கள் பலி போன்ற சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இந்தநிலையில், மதுபானி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் மேஜையில் வைக்கப்பட்ட மதுபானத்தை, மூன்று பேர் ஒன்றாக அமர்ந்து குடிக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. அதில், பாப் இசையைக் கேட்டவாறே, அவர்கள் மது அருந்தும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அந்த வீடியோவில் இருக்கும் நபர்கள் குறித்து விசாரித்த போது, பாஜகவின் ஜஞ்சர்பூர் பிரிவின் மாவட்டத் தலைவர் சியரம் சாஹூ மற்றும் அவரது கூட்டாளிகள் என்பது தெரியவந்தது.

இந்த வீடியோ ஆன்லைனில் வைரலானதால், மாவட்டத் தலைவர் சியராம் சாஹு தனது மொபைல் போனை அணைத்து வைத்துள்ளார். இந்த சம்பவம் குறித்து, எவ்வித பதிலும் அவர் அளிக்கவில்லை. இவ்விவகாரம் தொடர்பாக, அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார் மற்றும் பாஜக தலைமையை எதிர்கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ் கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து ஜஞ்சர்பூர் டிஎஸ்பி ஆஷிஷ் ஆனந்த் கூறுகையில், ‘கடந்த 4 நாட்களாக, 3 பேர் ஒன்றாக அமர்ந்து மது அருந்தும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மது குடித்த இடத்தையும் ஜஞ்சர்பூர் போலீசார் விசாரித்து வருகின்றனர். சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, உரிய அபராதம் விதிக்கப்படும்’ என்றார்.

Related Stories: