இந்தியா தடை விதித்த ஆப்களில் ஆன்லைன் பாடம் நடத்தும் சீனா: தவிக்கும் இந்திய மாணவர்கள்

புதுடெல்லி: சீனாவில் உள்ள பல்வேறு மருத்துவ கல்லூரி, பல்கலைக் கழகங்களில் இந்தியாவை சேர்ந்த 23,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். இவர்களில் 20,000 பேர் மருத்துவம் படிக்கின்றனர். கொரோனா காரணமாக கடந்தாண்டு மார்ச்சில்  இந்தியா திரும்பிய இந்த மாணவர்கள் ஆன்லைன் மூலமாக படிப்பை தொடர்கின்றனர். கிழக்கு லடாக் எல்லை மோதலுக்கு பிறகு, ஏறக்குறைய டிக்டாக் உட்பட 250க்கும் மேற்பட்ட சீன செயலிகளுக்கு ஒன்றிய அரசு தடை விதித்தது.

இதில், வீ சாட், டிங் டாக், சூப்பர்ஸ்டார் உள்ளிட்ட வீடியோ சாட் செயலிகளையே சீன கல்வி நிறுவனங்கள் ஆன்லைன் படிப்புகளுக்கு பயன்படுத்தி வருகின்றன. ஆனால், இந்தியாவில் இதற்கு தடை விதிக்கப்பட்டு இருப்பதால், மாணவர்களின் ஆன்லைன் கல்வி பாதித்துள்ளது. இந்தியாவில் தடை செய்யப்பட்ட சீன செயலிகளை ஆன்லைன் படிப்புக்கு மாணவர்கள் பதிவிறக்கம் செய்ய வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டு உள்ளனர். இந்த பிரச்னைக்கு தீர்வு காண இரு நாட்டு அரசுகளும் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவர்கள் அமைப்பு வலியுறுத்தி உள்ளது.

Related Stories: