சூடுபிடிக்கும் 7ம் கட்ட அகழாய்வு பணிகள்!: அகரத்தில் முதல்முறையாக சுடுமண் செங்கல் சுவர் கண்டெடுப்பு..!!

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெற்று வரும் 7ம் கட்ட அகழாய்வில் அகரத்தில் 3 வரிசை கொண்ட சுடுமண் செங்கல் சுவர் கண்டெடுக்கப்பட்டிருக்கிறது. கீழடியில் தமிழக தொல்லியல்துறை சார்பில் கீழடி, அகரம், கொந்தகை, மணலூர் உள்ளிட்ட 4 இடங்களில் அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன. கீழடியில் இதுவரை 6 கட்டங்களாக நடைபெற்ற அகழாய்வில் உறைகிணறு, செப்பு கிண்ணங்கள், எடைக்கல், அச்சு, வட்ட சில்லு, செங்கல் கட்டுமானம் உள்ளிட்டவை கண்டெடுக்கப்பட்டன.

இந்நிலையில் அகரத்தில் நடைபெற்று வரக்கூடிய 7ம் கட்ட அகழாய்வில் முதல்முறையாக 3 வரிசை கொண்ட சுடுமண் செங்கல் சுவர் கண்டறியப்பட்டுள்ளது. இந்த சுடுமண் செங்கல் சுவர், ஒன்றரை அடி உயரத்தில் 3 வரிசை கொண்டதாக இருந்தது. அகரத்தில் இதுவரை 8 குழிகள் தோண்டப்பட்டிருக்கின்றன. அதில் இதுவரை 4 அடி ஆழத்திற்கு மட்டும் அகழாய்வு பணிகள் நடைபெற்றிருக்கின்றன. இதில் உறைகிணறு கண்டறியப்பட்ட குழிக்கு அருகே சுடுமண் செங்கல் சுவர் கண்டெடுக்கப்பட்டிருக்கிறது.

அகரத்தில் மேலும் அகழாய்வு செய்யும் பட்சத்தில் சுவற்றின் முழு பரிமாணமும் தெரியவரும் என்று தொல்லியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இன்னும் 2 மாதங்களில் அகழாய்வு பணிகள் நிறைவுபெற இருப்பதால் பணிகள் வேகமெடுத்திருக்கின்றன. இதனிடையே கீழடியில் தமிழக தொல்லியல்துறை சார்பில் நடைபெற்று வரும் 7ம் கட்ட அகழாய்வு பணிகளை ஒன்றிய தொல்லியல்துறை குழு நேரில் ஆய்வு செய்தது. ஒன்றிய தொல்லியல்துறை மண்டல இயக்குநர் மகேஸ்வரி உள்ளிட்டோர் கீழடி, அகரம், கொந்தகை ஆகிய 3 தளங்களிலும் நேரில் ஆய்வு செய்தனர்.

Related Stories: