விஸ்வரூபமெடுக்கும் ‘பெகாசஸ்’ விவகாரம்: ராகுலின் செல்போன்கள் ஒட்டுக்கேட்பு..! ஒன்றிய அரசை எதிர்ப்பவர்கள் வேவு பார்க்கப்பட்டது அம்பலம்

புதுடெல்லி, ஜூலை 20: நாடு முழுவதும் ‘பெகாசஸ்’ தொலைப்பேசி உரையாடல் ஒட்டுகேட்பு விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல், 2 ஒன்றிய அமைச்சர்கள், நீதிபதி, எதிர்க்கட்சி தலைவர்கள் மற்றும் ஒன்றிய அரசை எதிர்த்தவர்கள் என சுமார் 300 இந்தியர்களின் தொலைபேசி உரையாடல் ஒட்டு கேட்கப்பட்டதாக பட்டியல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இஸ்ரேலை தலைமையிடமாக கொண்ட நிறுவனமான என்எஸ்ஓ ‘பெகாசஸ் ஸ்பைவேர்’ என்ற உளவு பார்க்கும் மென்பொருளை அறிமுகப்படுத்தியது. இந்த மென்பொருளை பயன்படுத்தி உலகம் முழுவதும் பல்வேறு முக்கிய நபர்களின் தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக்கேட்கப்பட்டுள்ளது.  இதுதொடர்பாக பார்பிட்டன் என்ற ஊடக நிறுவனத்துடன் இணைந்து தி வயர், வாஷிங்டன் போஸ்ட், கார்டியன் உள்ளிட்ட 17 ஊடக நிறுவனங்கள் நடத்திய ஆய்வில், சுமார் 50,000 செல்போன் எண்கள் கண்காணிக்கப்பட்டு, 50 நாடுகளில் 1,000க்கும் மேற்பட்ட நபர்களின் எண்கள் உளவு பார்க்கப்பட்டது தெரியவந்தது. இந்தியாவில் கடந்த 2019ம் ஆண்டு சில பத்திரிகையாளர்க்ள மற்றும் சமூக ஆர்வலர்களின் போன்கள் ஒட்டுக்கேட்கப்பட்ட தகவல் வெளியாகியிருந்தது.

பிரியங்கா காந்தி உட்பட சுமார் 1400 பேருக்கு பெகாசஸ் லிங்க் அனுப்பட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில், 2 ஆண்டுக்கு பிறகு தற்போது ஒன்றிய அரசே 2 ஒன்றிய அமைச்சர்கள், உச்சநீதிமன்றத்தின் தற்போதைய நீதிபதி, 40 பத்திரிகையாளர்கள், 3 முக்கிய எதிர்க்கட்சி தலைவர்கள், தொழிலதிபர்கள், அரசு அதிகாரிகள் என 300 இந்தியர்களின் விவரங்களை இந்த மென்பொருளை பயன்படுத்தி திருடப்பட்டுள்ளதாக நேற்று முன்தினம் தி ஒயர் என்ற இந்திய செய்தி நிறுவனம் உறுதிபடுத்தியது. இந்த விவகாரம் அனைத்து தரப்பினரையும் அதிர்ச்சி அடைய வைத்தது.  இந்நிலையில், நேற்று இந்தியாவில் உள்ள முக்கிய பிரமுகர்கள் யார் யாரின் தொலைபேசி ஒட்டுக்கேட்கப்பட்டது என்ற பட்டியல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த பட்டியலில் காங்கிஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி பயன்படுத்திய 2 செல்போன் எண்கள் 2018ம் நடு பகுதியில் இருந்து 2019ம் ஆண்டு நடு பகுதி வரை ஒட்டுக்கேட்கப்பட்டுள்ளது. தற்போது இந்த எண்களை ராகுல் பயன்படுத்தவில்லை. மேலும், ராகுலின் 5 நண்பர்கள் மற்றும் அவருக்கு அறிமுகமானவர்கள் குறிவைக்கப்பட்டு உளவு பார்க்கப்பட்டதாக கூறப்படுகிறது.

மோடி அமைச்சரவையில் உள்ள ரயில்வே மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், ஒன்றிய நீர்வளத்துறை இணையமைச்சர் பிரகலாத் சிங் படேல் பெயரும் பட்டியல் இடம்பெற்றுள்ளது. அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், அங்கீகரிப்படாத நபரால் சட்டவிரோதமாக இந்தியாவில் கண்காணிக்க முடியாது. இந்திய ஜனநாயகத்திற்கு தீங்கு விளைவிக்கவே இவ்வாறு தகவல் பரப்பப்படுகிறது. தனது தொலைபேசியை ஒன்றிய அரசு ஒட்டுக்கேட்கவில்லை என நாடாளுமன்றத்தில் நேற்று விளக்கமளித்தார்.  இதேபோல், இந்திய தேர்தல் ஆணையராக இருந்த அசோக் லவாசா, உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த ரஞ்சன் கோகாய் மீது புகார் அளித்த நீதிமன்ற ஊழியரின் 3 செல்போன்கள், பிரபல தேர்தல் வியூக நிறுவனமான ஐ-பேக் நிறுவனர் பிரசாந்த் கிஷோர், மம்தா பானர்ஜி உறவினரான எம்எல்ஏ அபிஷேக் பானர்ஜி ஆகியோரது செல்போன்களும் ஒட்டுக்கேட்கப்பட்டதாக வெளியான பட்டியலில் இடம்பெற்றுள்ளது. இத்தகவல்களை ஒன்றிய அரசு மறுத்துள்ளது. இது உலக அரங்கில் இந்தியாவின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த வெளியிடப்பட்ட பொய்யான தகவல் என ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா மறுத்துள்ளார்.

என்எஸ்ஓ மறுப்பு

பெகாசஸ் மென்பொருளை இந்தியாவுக்கு விற்பனை செய்த என்எஸ்ஓ நிறுவனமும் தொலைபேசிகள் ஒட்டுக் கேட்கப்பட்டதற்கான புகார்களை மறுத்துள்ளது. ‘அங்கீகரிக்கப்பட்ட அரசுகளுக்கு மட்டுமே தகவல்களை வழங்கி உள்ளோம். தவறான புகார்களைத் தெரிவிப்போர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஒன்றிய அரசு விளக்கம்

இந்த விவகாரம் தொடர்பாக ஒன்றிய அரசு அளித்துள்ள விளக்கத்தில், ‘இந்தியா உறுதியான ஜனநாயக நாடு. அனைத்து குடிமக்களின் தனிநபர் உரிமைகள் பாதுகாக்கப்படுவதில் ஒன்றிய அரசு உறுதியாக இருக்கிறது. குறிப்பிட்ட  நபர்கள் மீதான அரசாங்க கண்காணிப்பு தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு எந்தவொரு  உறுதியான அடிப்படையோ அல்லது உண்மையோ இல்லை. இந்த அறிக்கை அடிப்படை ஆதாரமற்றது. வாட்ஸ் அப்பில் பெகாசஸைப் அரசு பயன்படுத்துவதாக ஏற்கனவே கூறப்பட்டது. அந்த அறிக்கைகளுக்கு உண்மை அடிப்படையில் எந்த ஆதாரமும் இல்லை என்றும் உச்ச நீதிமன்றத்தில் வாட்ஸ்அப்  உட்பட அனைத்து தரப்பினரும் திட்டவட்டமாக மறுத்துவிட்டனர். பெகாசஸைப்  பயன்படுத்துவது பற்றிய தகவல் அறியும் சட்டத்தின் கீழ் இந்திய அரசு அளித்த  பதில் ஊடகங்களால் அனைத்து தரப்பினருக்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளது. இது  இந்திய அரசுக்கும் பெகாசஸுக்கும் இடையிலான தொடர்பு என்று கூறப்படும்  குற்றச்சாட்டுக்கு எதிர்கொள்ள போதுமானது’ என கூறி உள்ளது.

Related Stories: