விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் சூதாட்டம் நடந்ததா?: சர்வதேச டென்னிஸ் ஒருமைப்பாட்டு அமைப்பு விசாரணை..!!

லண்டன்: விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் மேட்ச் பிக்சிங் எனப்படும் சூதாட்டம் நடைபெற்றதாக புகார்கள் எழுந்துள்ளன. கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் லண்டனில் சமீபத்தில் நடைபெற்றது. இதில் ஆடவர் ஒற்றையர் போட்டி மற்றும் இரட்டையர் ஆட்டம் ஒன்றின் முடிவுகள் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் இருப்பதாக புகார்கள் எழுந்தன. இந்த இரண்டு ஆட்டங்களிலும் சூதாட்டம் நடைபெற்றதாக சந்தேகம் எழுந்துள்ளது. இரண்டு போட்டிகளின் போது இதுவரை இல்லாத அளவுக்கு சூதாட்டம் நடைபெற்றதாக சர்வதேச டென்னிஸ் ஒருமைப்பாட்டு அமைப்புக்கு புகார்கள் வந்திருக்கின்றன.

ஆடவர் இரட்டையர் போட்டியில் முதல் செட்டில் வந்த ஜோடி, அடுத்த 3 செட்களில் தோல்வியை தழுவியது. இதுபோன்ற ஒற்றையர் போட்டியிலும் முடிவுகளில் சந்தேகம் எழுந்திருக்கிறது. இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள சர்வதேச டென்னிஸ் ஒருமைப்பாட்டு அமைப்பு நிர்வாகி ஒருவர், மேட்ச் பிக்சிங் நடந்ததற்கான ஆதாரங்கள் இதுவரை கிடைக்கவில்லை என்றார். எனினும் ரகசிய விசாரணை நடைபெற்று வருவதாக அவர் தெரிவித்துள்ளார். ஜனவரி மாதம் முதல் சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் 34 முறையற்ற ஆட்டங்கள் நடைபெற்றதாக சர்வதேச டென்னிஸ் ஒருமைப்பாட்டு அமைப்புக்கு புகார்கள் வந்திருக்கின்றன.

Related Stories: