தோல்வியை எதிர்த்து மம்தா வழக்கு தேர்தல் ஆணையம், சுவேந்துக்கு நோட்டீஸ்: கொல்கத்தா உயர் நீதிமன்றம் உத்தரவு

கொல்கத்தா: நந்திகிராம் தொகுதியில் தோல்வியடைந்ததை எதிர்த்து மேற்கு வங்க முதல்வர் மம்தா தொடர்ந்த வழக்கில், எதிர்கட்சி தலைவர் சுவேந்து அதிகாரி மற்றும் தேர்தல் ஆணையத்திற்கு கொல்கத்தா உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.  

சமீபத்தில் நடந்த மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் முதல்வர் மம்தா பானர்ஜியை எதிர்த்து பாஜ சார்பில் போட்டியிட்ட சுவேந்து அதிகாரி, 1956 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த வெற்றியை எதிர்த்து, முதல்வர் மம்தா பானர்ஜி கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி கவுசிக் சந்தா முன்னிலையில் விசாரணைக்கு பட்டியலிடப்பட்டது.

ஆனால், கவுசிக் சந்தா பாஜ தலைவர்களுடன் நெருக்கமாக உள்ளதால், இந்த வழக்கு அவர் விசாரித்தால் ஒருதலைப்பட்சமாக இருக்குமென மம்தா குற்றம்சாட்டினார். இதனால் விசாரணையிலிருந்து தாமாக விலகிய நீதிபதி கவு்சிக் சந்தா, மம்தாவுக்கு ₹5 லட்சம் அபராதம் விதித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி சர்கார் அமர்வுக்கு மாற்றப்பட்டு நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சர்கார், நந்திகிராம் தேர்தல் தொடர்பான அனைத்தும் ஆவணங்களையும் தேர்தல் ஆணையம் பாதுகாக்க வேண்டும். வழக்கில் தொடர்புடைய சுவேந்து அதிகாரி மற்றும் இதில் சம்பந்தப்பட்ட உள்ள கட்சியினர் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, வழக்கை ஆகஸ்ட் 12ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

வேறு மாநிலத்துக்கு மாற்றக் கோரி மனு: இதற்கிடையே, கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் இருந்து இந்த வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்ற வேண்டுமென சுவேந்து அதிகாரி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இடைத்தேர்தல் நடத்த முயற்சி

நந்திகிராம் தொகுதியில் தோல்வி அடைந்த மம்தா முதல்வராக பதவியேற்றுள்ளார். அவர் அடுத்த 6 மாதங்களுக்குள் இடைத்தேர்தலில் போட்டியிட்டு எம்எல்ஏ ஆக வேண்டும். இல்லையெனில், அவரது பதவி பறிக்கப்படும். அதன்படி, வரும் நவம்பர் 4ம் தேதிக்குள் மம்தா எம்எல்ஏ ஆக வேண்டும். இதற்காக, பவானிப்பூர் தொகுதி எம்எல்ஏவும், அமைச்சருமான சோவந்தேப் சட்டோபாத்யாய், தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதைத் தொடர்ந்து, திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள், டெல்லியில் இன்று தலைமைத் தேர்தல் ஆணைய அதிகாரிகளை சந்தித்து, மாநிலத்தில் இடைத்தேர்தல் நடத்த வலியுறுத்த திட்டமிட்டுள்ளனர். கொரோனா பாதிப்பால் இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் விரும்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: