சுற்றுலா தலங்கள் மற்றும் பொது இடங்களில் மக்கள் முககவசம் அணியாமல் சுற்றுவது வேதனை தருகிறது: தொற்று பரவும் என பிரதமர் மோடி கவலை

புதுடெல்லி: சுற்றுலாதலங்கள் மற்றும் பொது இடங்களில் மக்கள் முககவசம் அணியாமல் இருப்பது கவலையளிப்பதாக பிரதமர் மோடி வேதனை தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை சற்று குறையத் தொடங்கி உள்ளது. இதனால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர். வழிபாட்டு தலங்கள், சுற்றுலா, மற்றும் அனைத்து போக்குவரத்தும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் மக்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. பல இடங்களில் பொதுமக்கள் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாமல் நடந்து கொள்வதாகவும், இதனால் கொரோனா மூன்றாவது அலை நிகழக்ககூடும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இந்நிலையில், வட கிழக்கு மாநிலங்களில் புதிய தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கி உள்ள நிலையில், 8 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நேற்று கலந்துரையாடினார். இதில் அசாம், நாகாலாந்து, திரிபுரா, சிக்கிம், மணிப்பூர், மேகாலயா, அருணாசலப்பிரதேசம், மிசோரம் மாநில முதல்வர்கள் கலந்து கொண்டனர்.

இதனை தொடர்ந்து பிரதமர்  மோடி வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: எப்போது மூன்றாவது அலை தாக்கும்? மீண்டும் நோய் தொற்று ஏற்படுவதற்கு முன் கொஞ்சம் ரசித்து கொள்வோம் என்ற எண்ணங்கள் மக்கள் மனதில் எழக்கூடாது. நாம் அனைவரும் நிலைமை குறித்து சிந்திக்க வேண்டும். தற்போது மலைவாசஸ்தலங்களில் உள்ள சுற்றுலா இடங்கள் மற்றும் மார்க்கெட் பகுதிகளில்  பொதுமக்கள் கூட்டம் நிரம்பி வழிகின்றது. பொதுமக்கள் முககவசம் அணியாமல் சுற்றுவது கவலைக்குரியது. நமது பாதுகாப்புக்களை இந்த வழியில்  வீழ்த்தக்கூடாது.

கொரோனா மூன்றாவது அலை வராமல் தடுப்பதற்கு  நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவது அவசியமாகும். கொரோனா வைரசின் ஒவ்வொரு மாறுபாட்டையும் கவனிக்க வேண்டியது அவசியமாகும். பிறழ்வுகளுக்கு பின் வைரஸ் எவ்வளவு அபாயகரமானதாக இருக்கும் என்பது குறித்து நிபுணர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். இதுபோன்ற சூழ்நிலையில் நோய் தடுப்பு மற்றும் சிகிச்சை என்பது மிகவும் முக்கியமானதாகும். பரிசோதனை மற்றும் சிகிச்சை தொடர்பான உள்கட்டமைப்புக்களை நாம் மேம்படுத்த வேண்டும். இதற்காக ஒன்றிய அரசு ரூ.23 ஆயிரம் கோடிக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

வடகிழக்கில் உள்ள ஒவ்வொரு மாநிலமும் சுகாதார உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கு இந்த தொகுப்பில் இருந்து நிதிஉதவியை பெறலாம். வடகிழக்கு மாநிலங்களில் உள்ள பல மாவட்டங்களில் கொரோனா தொற்று மிகுந்த கவலையளிப்பதாக இருக்கின்றது. முதல்வர்கள் இது குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான போரில் வெற்றி பெறுவதற்கு 3டி சூத்திரம் தான் முக்கியமாகும். வைரசை தோற்கடிப்பதற்கான ஒரே வழி கடந்த ஆண்டு முதல் இந்தியா மேற்கொண்டு வரும் டெஸ்ட், டிராக், ட்ரீட் முறை தான். பொதுமக்கள் கொரோனா தடுப்பு வழிமுறைகளை தொடர்ந்து பின்பற்றினால் தான் மூன்றாவது அலையை தடுக்க முடியும். மேலும் தொடர்ந்து கொரோனா தடுப்பூசி போடுவதை அதிகரிக்க வேண்டும். இவ்வாறு  குறிப்பிட்டுள்ளார்.

* 3ம் அலை எச்சரிக்கை வானிலை அறிக்கையா?

கொரோனா மூன்றாவது அலை குறித்த எச்சரிக்கையை மக்கள் வானிலை அறிக்கை போல நினைப்பதாக ஒன்றிய சுகாதார துறை அமைச்சகம் கவலை தெரிவித்துள்ளது. செய்தியாளர்களை சந்தித்த சுகாதார துறை இணை செயலாளர் லாவ் அகர்வால் கூறுகையில், ‘‘மூன்றாவது அலை குறித்து எச்சரிக்கை விடுத்தால் பொதுமக்கள் அதனை வானிலை அறிக்கை போல நினைத்துக்கொள்கின்றனர். அதனுடைய தீவிரம் மற்றும் அதனுடன் தொடர்புடைய நமது பொறுப்புக்களை உணராமல் சாதாரணமாக எடுத்துக்கொள்கின்றனர்” என்றார்.

* முதல் கொரோனா நோயாளிக்கு மீண்டும் தொற்று

கடந்த ஆண்டு ஜனவரி 20ம் தேதி சீனாவின் வுகான் பல்கலைக்கழகத்தில் இருந்து திரும்பிய கேரளாவின் திரிச்சூரை சேர்ந்த மூன்றாமாண்டு மருத்துவ மாணவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்தியாவில் கொரோனா தொற்று பாதித்த முதல் நபர் இவர். இந்நிலையில் கல்வி தொடர்பாக மாணவி டெல்லி செல்வதற்கு திட்டமிட்டார். இதற்காக அவர் தற்போது கொரோனா பரிசோதனை செய்தபோது அவருக்கு மீண்டும் தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.

* 104 நாடுகளில் டெல்டா

உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரஸ் அதானம் கூறுகையில், ‘‘டெல்டா வைரஸ் பாதிப்பு உச்சத்தை தொட்டுள்ளது. உயிரிழப்பும் அதிகரித்துள்ளது. டெல்டா வைரஸ் தொற்று தற்போது 104 நாடுகளில் பரவியுள்ளது. தடுப்பூசி குறைவாக போடப்பட்டுள்ள பகுதிகளில் வைரஸ் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும். ஆனால் நோய் தொற்று எங்கும் முடிவுக்கு வரவில்லை. கொரோனா தொற்றுக்கு எதிராக உலக நாடுகள் ஒன்றிணைந்து போராட வேண்டும்” என்றார்.

* தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் நாளை மறுநாள் ஆலோசனை

வடகிழக்கு மாநிலங்களைத் தொடர்ந்து, தென் மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்த உள்ளார். அதன்படி, தமிழ்நாடு, ஆந்திர பிரதேசம், கர்நாடகா, ஒடிசா, மகாராஷ்டிரா மற்றும் கேரளா ஆகிய மாநில முதல்வர்களுடன் நாளை மறுநாள் கொரோனா தொற்று பரவல் சூழல் குறித்து பிரதமர் மோடி ஆலேசானை நடத்துகின்றார்.

* செப்டம்பரில் ஸ்புட்னிக் தயாரிப்பு

சீரம் நிறுவனம் வருகிற செப்டம்பர் முதல் ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசி உற்பத்தியை தொடங்க இருக்கின்றது. இது தொடர்பாக ரஷ்ய நேரடி முதலீட்டு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சீரம் நிறுவனத்தில் ஸ்புட்னிக் தடுப்பூசியின் முதல் தொகுப்பு தயாரிப்பு செப்டம்பரில் தொடங்குகின்றது. இந்தியாவில் ஆண்டுக்கு 30 கோடி டோஸ் உற்பத்தி செய்யப்படும் என குறிப்பிட்டுள்ளது.

ஒரே நாளில் 2,020 பேர் பலி

* நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 31 ஆயிரத்து 433 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

* தொற்று  பாதித்த 2 ஆயிரத்து 20 பேர் உயிரிழந்துள்ளனர். மத்திய பிரதேச மாநில அரசு கொரோனா பலி குறித்த எண்ணிக்கையை திருத்தி உள்ளது. அங்கு புதிதாக 1,418 மரணங்கள் கொரோனா மரணங்களாக உறுதி செய்யப்பட்டுள்ளன. இதனால் நேற்றைய ஒருநாள் பலி எண்ணிக்கை 2,000த்தை தாண்டியது.

* சிகிச்சை பெற்றுவோர் எண்ணிக்கை 4 லட்சத்து 31 ஆயிரத்து 315ஆக குறைந்துள்ளது.

* 38.14 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

Related Stories: