ஏழுமலையானை தரிசிக்க சிபாரிசு கடிதத்தில் டிக்கெட் வழங்காததால் பக்தர்கள் சாலை மறியல்

திருமலை :  திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினந்தோறும் விஐபி தரிசனத்தில் முக்கிய பிரமுகர்களின் சிபாரிசு கடிதத்தின்   அடிப்படையில் தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்பட்டு வருகிறது. அவ்வாறு இன்று (செவ்வாய்) காலையில் நடைபெற வேண்டிய விஐபி தரிசனத்திற்காக  ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த முதல்வர், அமைச்சர்கள், எம்பி., எம்எல்ஏக்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களின் சிபாரிசு கடிதங்களை கொண்டு வந்த பக்தர்கள் கூடுதல் செயல் அதிகாரி அலுவலகத்திற்கு நேற்று காலை கொண்டு சென்றனர். ஆனால், அங்கிருந்த ஊழியர்கள் விஐபி தரிசன டிக்கெட்டுகள் வழங்க முடியாது என கூறி சிபாரிசு கடிதங்களை வாங்க மறுத்தனர்.

இதனால், பல 100 கி.மீட்டர்கள் பயணம் செய்து வந்த பக்தர்கள் தரிசனம் இல்லை என்று கூறியதால் ஏமாற்றமடைந்தனர். இதையடுத்து,  கூடுதல் செயல் அதிகாரி அலுவலகத்தின் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். தேவஸ்தான அதிகாரிகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். முக்கிய பிரமுகர்களின் சிபாரிசு கடிதங்களுக்கு விஐபி தரிசனம் வழங்க முடியாது என்றால் முன்கூட்டிய அறிவிப்பு வெளியிட்டிருக்க வேண்டும். அலிபிரி சோதனைச்சாவடியிலேயே தடுத்து நிறுத்தியிருக்க வேண்டும். ஆனால் திருமலைக்கு வந்த பிறகு இவ்வாறு சொல்வது என்ன  நியாயம் எனக்கூறி பக்தர்கள் மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்து அங்கு வந்த தேவஸ்தான அதிகாரிகள் மறியலில் ஈடுபட்ட பக்தர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அதிகாரிகள் கூறுகையில், ‘வருகிற 16ம் தேதி ஆனிவார ஆஸ்தானம் (வருடாந்திர கணக்கு சமர்ப்பிக்கும் சம்பிரதாய பூஜை) நடக்க உள்ளது. இதனால், இன்று (13ம் தேதி) காலை கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் எனும் கோயில் முழுவதும் சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற உள்ளது. எனவே, விஐபி தரிசனத்தில் அனுமதிக்க முடியாது என தெரிவித்தனர். இதையேற்று, பக்தர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இதனால், அப்பகுதியில் 1 மணிநேரம் பரபரப்பாக காணப்பட்டது.

Related Stories: