விவசாய உற்பத்தியை அதிகரிக்க அறுவடைக்கு பிந்தைய புரட்சி வேண்டும்: பிரதமர் மோடி பேச்சு

மும்பை: ``உற்பத்தியை அதிகரிக்க அறுவடைக்கு பிந்தைய புரட்சி வேண்டும்,’’ என்று பிரதமர் மோடி தெரிவித்தார். பிரதமர் மோடி அடுத்த ஆண்டிற்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதாக தெரிவித்திருந்தார். இதனால், 2வது முறையாக அவரது தலைமையிலான பாஜ மத்தியில் ஆட்சி அமைத்ததும், அவர் 3 புதிய வேளாண் சட்டங்களை அறிமுகப்படுத்தினார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள் கடந்த 8 மாதங்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு 4 பேர் கொண்ட கமிட்டியை நியமிக்க உத்தவிட்ட உச்ச நீதிமன்றம், அதுவரை ஒன்றிய அரசு புதிய வேளாண் சட்டங்களை அமல்படுத்த தடை விதித்து உத்தரவிட்டது. இந்நிலையில், விவசாயம் மற்றும் கிராமப்புற மேம்பாட்டிற்கான தேசிய வங்கியின் நிறுவன நாளான நேற்று பிரதமர் மோடி கூறியதாவது: கொரோனா தொற்று சவால்களுக்கு இடையேயும், முன் எப்போதும் இல்லாத வகையில் விவசாயிகளின் கடும் உழைப்பினால் விவசாய உற்பத்தி தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதே நேரம், விவசாய உற்பத்தியை அதிகரிக்க, அறுவடைக்கு பிந்தைய புரட்சி, மதிப்பு கூட்டல் வேண்டும்.

இதனை அடைய ஒன்றிய அரசு தொடர்ந்து, அயராது உழைத்து வருகிறது. தொழில்நுட்பத்தின் மூலம் நீர்பாசனம் முதல் விதைப்பது வரை, அறுவடை முதல் பணம் ஈட்டுவது வரை உள்ள பிரச்னைகளுக்கு தீர்வு காண அரசு தீவிர நடவடிக்கை எடுத்துள்ளது. விவசாயத்துறை தொடர்பான ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், இளைஞர்களை ஊக்குவிப்பதில் அரசு கவனம் செலுத்தி வருகிறது. விவசாயத்துறை  வளமிக்க பொருளாதார துறையாக மாறும் என்ற கிராமத்தினரின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற அறிவியல் சுற்றுச்சூழல் அமையவும், வளர்ச்சி திட்டங்களை துரிதப்படுத்தவும் அரசு தூண்டுதலாக இருக்கிறது. தற்சார்பு இந்தியா திட்டத்துக்கு கிராமப்புற பொருளாதாரம் முக்கியமாகும். இதற்காக நாடு முழுவதும் 12 கோடி சிறு விவசாயிகளுக்கு அதிகாரம் அளிக்க ஒன்றிய அரசு அர்ப்பணித்துள்ளது. இதனை அடைய கடந்த 7 ஆண்டுகளாக அரசு உறுதியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.  இவ்வாறு பிரதமர் பேசினார்.

Related Stories: