திண்டிவனம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ஆட்சியர் ஆய்வு

திண்டிவனம் : விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது. இதனால் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் உள்ள நெல் மூட்டைகள் நனைந்து சேதமடைந்தன. ஆகையால் மேல் கூரை இல்லாமல் பாதுகாப்பற்ற முறையில் வெள்ளிமேடுபேட்டை, ஆவணிப்பூர், நாட்டார்மங்கலம், தீவனூர், பனையூர், கிளியனூர், சேந்தமங்கலம், சிறுவாடி, நேமூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள நேரடி கொள்முதல் நிலையங்களில் இருந்து சுமார் 10 ஆயிரம் டன் நெல் மூட்டைகள் திண்டிவனம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இவற்றை மாவட்ட ஆட்சித் தலைவர் மோகன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 20 ஆயிரம் டன் மூட்டைகள் வைப்பதற்கான இடவசதி உள்ளதால், மேலும் பல்வேறு பகுதிகளிலிருந்து நெல் மூட்டைகள் திண்டிவனம் ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு வந்த வண்ணம் உள்ளன. ஆய்வின்போது சுமைதூக்கும் தொழிலாளர்களிடம் ஆட்சியர் குறைகளை கேட்டறிந்தார். அப்போது சுமை தூக்கும் தொழிலாளர்கள் தாங்கள் பல்வேறு பகுதிகளில் இருந்து இருசக்கர வாகனம் மூலம் வருகிறோம். தங்களை காவல்துறையினர் பிடித்து வழக்கு பதிவு செய்கின்றனர்.

அதற்கு தாங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர். அப்போது பேசிய ஆட்சியர் மோகன், என்னுடைய தொலைபேசி எண் அனைவரிடமும் உள்ளது. இதுபோன்ற பிரச்னை என்றால் நேரடியாக என்னை தொடர்புகொண்டு பேசலாம் என தெரிவித்தார். ஆய்வின்போது உதவி தர ஆய்வாளர் காத்தமுத்து, வருவாய் ஆய்வாளர் செல்வம் உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Related Stories: