மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பரவலாக மழை: குற்றாலம் அருவிகளில் நீர்வரத்து அதிகரிப்பு

தென்காசி:  மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கோடைபோல் வெயில் கொளுத்தி வந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு முதல் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. குற்றாலத்தில் கடந்த 2 நாட்களாக பகல்  முழுவதும் வெயில் இல்லை. இதமான காற்றும் வீசுவதுடன் அவ்வப்போது சாரல்  பெய்கிறது. சாரல் காரணமாக அருவிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. மெயினருவியில்  ஆண்கள் மற்றும் பெண்கள் பகுதியில் தண்ணீர் பரந்து விழுகிறது.

ஐந்தருவியில்  5 பிரிவுகளிலும் தண்ணீர் நன்றாக விழுகிறது. பழைய குற்றால அருவி,  புலியருவி, சிற்றருவி ஆகியவற்றிலும் தண்ணீர் நன்றாக விழுகிறது. அருவிகளில்  தண்ணீர் நன்றாக விழுந்த போதும் கொரோனா ஊரடங்கு காரணமாக சுற்றுலா பயணிகள்  குளிக்க தடை நீடிக்கிறது.  இதனிடையே வெளியூர்களில் இருந்து குற்றாலம் வரும்  சுற்றுலா பயணிகள், குளிக்க தடை விதிக்கப்பட்டிருப்பதை அறிந்து  ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.

பாபநாசம் அணை பகுதியில் 12 மிமீ மழை பதிவானது. கொடுமுடியாறு அணை பகுதியில் 15 மிமீ, சேர்வலாறில் 1 மிமீ, களக்காடு பகுதியில் 2.2, மிமீ, ராதாபுரம் வட்டாரத்தில் 31 மிமீ, அம்பையில் 2 மிமீ மழை பதிவானது.

பாபநாசம் அணை நீர்மட்டம் 116.30 அடியாக உள்ள நிலையில், அணைக்கு விநாடிக்கு 1,287.35 கனஅடி நீர் வருகிறது. அணையில் இருந்து 1,404 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. சேர்வலாறு நீர்மட்டம் 112 அடியாக உள்ளது. மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 76.55 அடியாக உள்ளது. அணைக்கு 46 கனஅடி நீர் வருகிறது. 250 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.  தென்காசி மாவட்டத்தில் ஆய்க்குடி பகுதியில் 16 மிமீ மழை, சிவகிரியில் 13 மிமீ, அடவிநயினார் அணை பகுதியில் 30 மிமீ, கருப்பாநதியில் 9 மிமீ, குண்டாறில் 7 மிமீ மழை பெய்துள்ளது. செங்கோட்டையில் 3 மிமீயும், தென்காசியில் 2.6 மிமீ மழையும் பதிவாகியுள்ளது. இதனிடையே நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.

Related Stories: