அசாமை தொடர்ந்து உபி.யிலும் புதிய சட்டம் 2 குழந்தைகளுக்கு மேல் பெற்றால் அரசு வேலை, நிதி உதவிகள் ‘கட்’: தேர்தலில் போட்டியிடவும் முடியாது

லக்னோ: சமீபகாலமாக, மக்கள் தொகை கட்டுப்பாடு என்ற பெயரில் பாஜ ஆளும் மாநிலங்களில் புதிய சட்டம் கொண்டு வரப்படுகிறது. அசாமில் ஹிமந்தா பிஸ்வா தலைமையில் பாஜ ஆட்சி அமைந்ததும், இதுதொடர்பான மசோதா கொண்டு வரப்பட்டது. 2 குழந்தைகளுடன் நிறுத்திக் கொண்டால்தான் அரசு வேலையும், அரசு நலத்திட்டமும் கிடைக்கும் என்ற மசோதா அம்மாநில சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது.இந்நிலையில், இதே போல் உத்தரப்பிரதேச மாநிலத்திலும் சட்ட வரைவு கொண்டு வரப்பட்டுள்ளது. ‘உ.பி. மக்கள் தொகை (கட்டுப்பாடு, உறுதிப்படுத்தல் மற்றும் நலன்கள்) மசோதா, 2021’ என்ற சட்டம் விரைவில் இயற்றப்பட உள்ளது. இந்த சட்ட வரைவு குறித்து மாநில சட்ட ஆணையம் ஜூலை 19ம் தேதிக்குள் பொது மக்கள் கருத்துக்களைத் தெரிவிக்கலாம் என்று அறிவித்துள்ளது.

2 குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொள்வதை தடுப்பதே இச்சட்டத்தின் நோக்கம். 2 குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொண்டால் அரசின் எந்த நலத்திட்ட உதவிகளும் கிடைக்காது. மானியம் போன்றவை பெற அவர்கள் தகுதியற்றவர்களாகி விடுவர். உபி மாநில அரசு வேலை கிடைக்காது.

 உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட முடியாது. பலதார மணம் செய்தால், ஒவ்வொரு தம்பதியினரும் ஒரு திருமணமான தம்பதிகளாக கணக்கிடப்படுவார்கள், இதன் மூலம், குழந்தைகளின் எண்ணிக்கை கணக்கில் கொள்ளப்பட்டு, அதன்படி நடவடிக்கை எடுக்கப்படும்.இந்த சட்டம், உத்தரப்பிரதேசத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவை  தேர்தலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரு குழந்தையோடு நிறுத்தினால் சலுகை

உபி அரசின் புதிய சட்ட வரைவின்படி,  ஒரே குழந்தையோடு கருத்தடை ஆபரேஷன் செய்து கொள்பவர்களுக்கு பல்வேறு சலுகைகள் கிடைக்கும். ஓராண்டு ஊதியத்துடன் மகப்பேறு விடுப்பு, குடிநீர், மின்சாரம், வீட்டு வரி கட்டணம் தளர்வு, இலவச மருத்துவ சிகிச்சை, இலவச இன்சூரன்ஸ், பள்ளி சேர்க்கையில் முன்னுரிமை, பெண் குழந்தைகளுக்கு பட்டப்படிப்பு வரை இலவச கல்வி, ஸ்காலர்ஷிப், அரசு வேலை போன்ற சலுகைகளை அனுபவிக்கலாம்.

Related Stories: