புதிய பிரதமர் - இடைக்கால பிரதமர் அதிகார மோதல் ஹைதியில் உள்நாட்டு போர் அபாயம்: ராணுவத்தை அனுப்பும்படி ஐநா, அமெரிக்காவுக்கு வேண்டுகோள்

போர்ட்டோ பிரான்ஸ்: ஹைதி அதிபர் கொல்லப்பட்டதை தொடர்ந்து, அங்கு அதிகார மோதல் ஏற்பட்டுள்ளது. இதனால், உள்நாட்டு போர் ஏற்படும் அபாயம் உருவாகி இருக்கிறது.கரீபியன் தீவு நாடான ஹைதி நாட்டின் அதிபர் ஜோவினெல் மொயிஸ் (53), கடந்த 7ம் தேதி அவருடைய வீட்டில் மர்ம கும்பலால் சுட்டுக் கொல்லப்பட்டார். மொயிஸ் படுகொலையில் கொலம்பியா, அமெரிக்காவை சேர்ந்த 28 பேர் அடங்கிய கும்பல் ஈடுபட்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இவர்கள் அனைவரும் கமாண்டோ பயிற்சி பெற்றவர்கள். இவர்களில் 26 பேர் கொலம்பியாவையும், 2 பேர் அமெரிக்காவையும் சேர்ந்தவர்கள். இவர்களில் 17 பேரை ஹைதி போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து நவீன துப்பாக்கிகள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கொலையில் தொடர்புடைய 4 பேரை ஏற்கனவே சுட்டுக் கொன்று விட்டனர்.

இருநாடுகளை சேர்ந்த கமாண்டோ வீரர்கள் மொயிஸ் கொலையில் ஈடுபட்டு இருப்பதால், இதில் மிகப்பெரிய வெளிநாட்டு, உள்நாட்டு சதிகள் இருப்பதாக திடுக்கிடும் தகவல் வெளியாகி இருக்கிறது. இவர் கொல்லப்படுவதற்கு 2 நாட்களுக்கு முன்பாக, ஏரியல் ஹென்ரி என்பவரை ஹைதியின் புதிய பிரதமராக அறிவித்தார். இவர் இந்த வாரம் பதவியேற்க இருந்த நிலையில்தான், மொயிஸ் கொல்லப்பட்டார். இதனால், இவர் பதவியேற்பது திட்டமிட்டப்படி நடக்குமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.காரணம், மொயிஸ் கொலையை தொடர்ந்து இடைக்கால பிரதமராக பதவி வகித்து வரும் கிலோடி ஜோசப், ராணுவத்தையும், காவல் துறையையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளார். இதனால், ஹென்ரிக்கும் கிலோடிக்கும் இடையே அதிகார மோதல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, உள்நாட்டு போர் ஏற்படும் அபாயமும் உருவாகி இருக்கிறது. இந்த பிரச்னையை தீர்ப்பதற்காக, ராணுவத்தை அனுப்பும்படி ஐநா.வுக்கும், அமெரிக்காவுக்கும் கிலோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அமெரிக்கா நிராகரிப்பு

ராணுவத்தை அனுப்பும்படி ஹைதி அரசு விடுத்துள்ள கோரிக்கையை அமெரிக்கா நிராகரித்து விட்டது. ‘ஹைதியில் இப்போதுள்ள சூழ்நிலையை சமாளிக்க அமெரிக்க ராணுவம் தேவையில்லை,’ என்று அது தெரிவித்துள்ளது. அதே நேரம், மொய்சி கொலை தொடர்பான விசாரணைக்கு உதவி செய்வதற்காக தனது நாட்டின் தேசிய புலனாய்வு அமைப்பான எப்பிஐ.யை சேர்ந்த அதிகாரிகளை ஹைதிக்கு அனுப்பியுள்ளது.

Related Stories: