ஆஸி.க்கு எதிராக முதல் டி.20: 18 ரன் வித்தியாசத்தில் வெ.இண்டீஸ் வெற்றி

செயின்ட் லூசியா: ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, 5 டி.20 மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் ஆடுகிறது. இதில் முதல் டி.20 போட்டி செயின்ட் லூசியாவில் இந்திய நேரப்படி இன்று காலை 5 மணிக்கு தொடங்கி நடந்தது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பிஞ்ச் பந்துவீ்ச்சை தேர்வு செய்தார். வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் பொல்லார்ட் ஆடாத நிலையில் நிக்கோலஸ் பூரன் அணியை வழி நடத்தினார். முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 145 ரன் எடுத்தது. அதிகபட்சமாக ரஸ்சல் 28 பந்தில், 3 பவுண்டரி, 5 சிக்சருடன் 51 ரன் எடுத்தார்.

சிம்மன்ஸ் 27, ஹெட்மயர் 20, பூரன் 17 ரன் எடுத்தனர். ஆஸி. பந்துவீச்சில் ஹேசல்வுட் 3, மிட்செல் மார்ஷ் 2 விக்கெட் எடுத்தனர். பின்னர் களம் இறங்கிய ஆஸ்திரேலியா 16 ஓவரில் 127 ரன்னுக்கு ஆல்அவுட் ஆனது. இதனால் 18 ரன் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்றது. ஆஸி. தரப்பில் மிட்செல் மார்ஷ் 51 (31பந்து), மேத்யூ வேட் 33(14பந்து) ரன் எடுத்தனர். வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சில் ஒபேட் மெக்காய் 4, ஹேடன் வால்ஷ் 3 விக்கெட் எடுத்தனர். ஒபேட் மெக்காய் ஆட்டநாயகன் விருது பெற்றார். 2வது போட்டி நாளை மறுநாள் இதே மைதானத்தில் நடக்கிறது.

Related Stories: