முதலமைச்சர் பொது நிவாரண நிதி இணையதளம் தொடக்கம் தமிழக அரசின் நிதிநிலை வெள்ளை அறிக்கை பட்ஜெட்டுக்கு முன்பு வெளியிடப்படும்: அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்

சென்னை: தமிழக முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு எளிதாக நிதியை செலுத்துவதுடன், செலவு குறித்த விவரங்களை தெரிந்துகொள்ளும் வகையில் புதிய  இணையதளத்தை தலைமை செயலகத்தில் நேற்று நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில், தகவல் தொழில்நுட்ப அமைச்சர் மனோ தங்கராஜ் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.பின்னர், அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:முதலமைச்சர் நிவாரண நிதிக்கு பணம் வந்தால், அது என்றைக்கு, யாரால் வழங்கப்பட்டது. அதை எப்படி அரசு பயன்படுத்துகிறது என்பதை வெளிப்படையாக சொல்ல வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் எங்களுக்கு உத்தரவிட்டி ருந்தார். அதற்கான இணையதளத்தை பார்த்தபோது, அதில் சில குறைகள் இருந்தது. இதை புதுப்பித்தால், யாராவது நிதி வழங்கும் போது இது கொரோனாவுக்காகவா அல்லது வேறு பொது காரணத்துக்காகவா என்பதை தெரிவிக்கக்கூடியதாக இருக்க வேண்டும். ஆனால் இந்த இணையதளத்தில் இல்லை.

 எனவே முதல்வர் எங்களுக்கு ஒரு சலுகை கொடுத்தார். மே 6ம்தேதிக்கு முன்னர் வந்த நிதி எல்லாம் தனி கணக்கில் வைத்துக் கொள்ள வேண்டும். மே 7ம்தேதி முதல் வருவதை எல்லாம் இப்போதைக்கு முழுமையாக ெகாரோனா என்ற தனிப்பிரிவில் வைக்க வேண்டும். அதை மக்களுக்கு தெரிவிக்கும் வகையில் உருவாக்க முடிவு செய்யப்பட்டது.  இருக்கிற வெப்சைட்டுகளை ஆய்வு செய்தபோது, கேரள அரசின் இணையதளம் சிறப்பாக இருந்தது. வெளிப்படைத்தன்மை இருந்தது. அதையும் ஒரு மாடலாக எடுத்து, அதை இன்னும் எந்த வகையில் சிறப்பாக செய்ய முடியும் என்பதை ஆய்வு செய்து அதிகாரிகளின் சிறப்பான முயற்சியால் புதிய இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.  ஒன்றிய அரசின் பி.எம்.கேர்ஸ் இணையதளத்தில் எந்த தகவலும் இல்லை. எந்த வெளிப்படைத்தன்மையும் இல்லை. ஆனால் தமிழக அரசின் வெப்சைட் முழுமையான வெளிப்படைத்தன்மையுடன் உருவாக்கப்பட்டுள்ளது. மே 7ம்தேதி முதல் இதுவரை வந்துள்ள மொத்த தொகை நேற்று முன்தினம் வரை ₹472 கோடியே 62லட்சத்து 52,648. கடந்த ஆண்டு மார்ச் 23ம்தேதி முதல் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு முதல் அலை வந்த போது, முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வந்த நிதி மே 6ம்தேதி வரை 14 மாதத்தில் வந்த மொத்த நிதி சுமார் ₹400 கோடி. ஆனால் இந்த 2 மாதத்தில் இந்த அளவுக்கு நிதி வந்துள்ளது.

  இந்த நிதியில் இருந்து ஆக்சிஜன், படுக்கை, மருந்துக்கு இதுவரை ₹241 கோடி செலவாகியுள்ளது. தமிழக நிதி நிலமை குறித்த வெள்ளை அறிக்கை விரைவில் வெளியிடப்படும். சில நாட்களில் அல்லது ஒரிரு வாரங்களில் பட்ஜெட் தாக்கலுக்கு முன்பே வெளியிடப்படும்.  

 பொதுமக்களிடம் இருந்து நேராக வாங்கும் நிவாரண தொகை கூடுதல் வெளிப்படைத்தன்மையுடன் இருக்க வேண்டும் என்பதற்கான முயற்சி இது. இது தனி அக்கவுண்ட். இந்த தொகை அரசு நிதியில் கலக்காது. தனி கணக்காகவே இருக்கும். இந்த ஆண்டு இ-பட்ஜெட்டுக்கு செல்லப் போகிறோம். எனவே சாப்ட் காப்பியாக கொடுக்க போகிறோம். முடிந்த அளவுக்கு 100 சதவீதம் எல்லாமே சாப்ட் காப்பியாகவும், வெப்சைட் மூலமும் கொடுக்க வேண்டும் என்பதே எங்கள் இலக்கு. 2017ல் நான் அன்றைய சபாநாயகருக்கு கடிதம் எழுதினேன். அதில்,‘‘ ஒவ்வொரு ஆண்டுக்கு பட்ஜெட்டுக்கு மட்டும் சுமார் 570 புத்தகங்கள் வரை கொடுக்கிறீர்கள். 15% எம்எல்ஏக்கள் மட்டுமே இதை வீட்டுக்கு எடுத்து செல்கின்றனர். 300 காப்பி அடித்து அது ரீசைக்கிளுக்கு செல்கிறது. அதிலும் லாரிகளில் கொண்டு செல்வதில் தவறு நடப்பதாக சொல்கிறார்கள். எனவே பிரிண்ட் அடிப்பதை நிறுத்தி விட்டு சாப்ட் காப்பியாக கொடுங்கள் ’’ என்று எழுதியிருந்தேன்.  ஆனால் எந்த நடவடிக்கையும் கடந்த அரசு எடுக்கவில்லை. ஆனால் இந்த ஆட்சியில் முதல்வர் உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.   இவ்வாறு அவர் கூறினார்.ஒன்றிய அரசின் பி.எம் கேர்ஸ் இணையதளத்தில் எந்த தகவலும் இல்லை. எந்த வெளிப்படைத்தன்மையும் இல்லை.

Related Stories: