அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.35 லட்சம் மோசடி அதிமுக முன்னாள் அமைச்சர் சரோஜாவின் அக்கா மகன் கைது: விழுப்புரம் சிறையில் அடைப்பு

விழுப்புரம்: வேலை வாங்கித் தருவதாக ரூ.35 லட்சம் மோசடி செய்த வழக்கில் அதிமுக முன்னாள் சமூக நலத்துறை அமைச்சர் சரோஜாவின் அக்கா மகன் கைது செய்யப்பட்டு, விழுப்புரம் சிறையில் அடைக்கப்பட்டார். விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே கடையம் கிராமத்தை சேர்ந்தவர் குணசேகரன் (48). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு விழுப்புரம் எஸ்பி அலுவலகத்தில் ஒரு புகார் அளித்தார். அதில், விழுப்புரம் அருகே பொன்னங்குப்பத்தை சேர்ந்த நண்பர் பாக்கியராஜ் மூலமாக அதிமுக முன்னாள் சமூக நலத்துறை அமைச்சர் சரோஜாவின், அக்கா மகன் சென்னை அசோக்நகரை சேர்ந்த ரமேஷ்பாபு எனக்கு அறிமுகமானார். இவர் தனது சித்தி சமூக நலத்துறை அமைச்சராக உள்ளதால், அவர் மூலமாக யாராவது அரசு பணியில் சேர விரும்பினால் இன்டர்வியூ கார்டு கொடுத்தால் அரசு பணிக்கு தகுந்தவாறு தொகையை பெற்று உறுதியாக வேலை வாங்கி தருவதாக கூறினார்.

அதை நம்பி கடந்த 2018ம் ஆண்டு எனது உறவினர், நண்பர்கள் உள்பட 17 பேருக்கு சத்துணவு அமைப்பாளர், அங்கன்வாடி பணியாளர், கிராம உதவியாளர் பணி வாங்கி தருவதாக கூறி ரூ.35 லட்சத்ைத ரமேஷ்பாபுவிடம் கொடுத்தேன். அவரும் வேலை வாங்கித் தருவதாக கூறினார். அமைச்சரின் அறைக்கெல்லாம் என்னை கூட்டிச் சென்றார். உதவியாளர்களுடனும் அவர் பேசினார். ஆனால், அவர் கூறியபடி வேலை வாங்கி தராமல் ஏமாற்றி வந்தார். இது குறித்து குணசேகரன் நேரிலும், தொலைபேசியிலும் கேட்டபோது பணம் பெற்ற விவகாரம் தொடர்பாக யாரிடமாவது சொன்னால், என்னையும், குடும்பத்தையும் கொலை செய்துவிடுவதாக ரமேஷ்பாபு மிரட்டினார்.

ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால், அவரால் இனி வேலை வாங்கித் தரமுடியாது என்பதால் பணத்தை திருப்பித் தரும்படி தொடர்ந்து கேட்டேன். ஆனால், அவரும் எனக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்து வருகிறார் என்று கூறியிருந்தார். இது சம்பந்தமாக விசாரணை நடத்த மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு எஸ்பி நாதா உத்தரவிட்டார். அதன்படி விசாரணை நடத்திய குற்றப்பிரிவு போலீசார், ரமேஷ்பாபுவை (42) நேற்று முன்தினம் கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விழுப்புரம் சிறையில் அடைத்தனர். முன்னாள் அமைச்சர் சரோஜாவின் அக்கா மகன் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் முன்னாள் அமைச்சருக்கும் தொடர்பு உள்ளதா என்று மத்தியக் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஒரு முன்னாள் அமைச்சரின் உறவினர் முதல் முறையாக கைது செய்யப்பட்டுள்ளார். விரைவில் இதுபோன்ற புகார்கள் மாநிலம் முழுவதும் வரலாம் என்று போலீசார் கருதுகின்றனர். வேலூர் மாவட்டத்தில் முன்னாள் அமைச்சர் நிலோபர் கபில் மீதும் இதே குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன. தற்ேபாது மேலும் பல இடங்களில் புகாரும் அளிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இது அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: