மணல் கடத்தியதாக சொந்த கட்சி பிரமுகர் மீது பொய் புகார்; அதிமுக முன்னாள் எம்எல்ஏ ராஜநாயகத்தை கைது செய்ய வேண்டும்: அறந்தாங்கியில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு

அறந்தாங்கி: புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதியில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக வேட்பாளராக முன்னாள் எம்எல்ஏ ராஜநாயகம் போட்டியிட்டார். அவரை கட்சி அறிவித்தபோது மணமேல்குடி ஒன்றிய அதிமுக நிர்வாகி சுரேஷ் உள்ளிட்டோர் வேட்பாளரை மாற்றக்கோரி பல்வேறு போராட்டங்களை நடத்தினர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் ராஜநாயகத்தின் சொந்த ஊரான சிறுமருதூர் அருகே வெள்ளாற்றிலிருந்து இருசக்கர வாகனங்களில் மணல் அள்ளி சென்றதாக மணமேல்குடி ஒன்றிய அதிமுக நிர்வாகி சுரேஷ், அவரது சகோதரர் சுதர்சன் ஆகியோர் மீது அப்பகுதி கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகாரின்பேரில் நாகுடி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும் இருச்ககர வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.

அந்த சம்பவத்தின்போது சுரேஷ், அவரது சகோதரர் சுதர்சன், அவர்களது தாய் இந்திரா ஆகியோருக்கும், முன்னாள் எம்எல்ஏ ராஜநாயகத்தின் சகோதரர் ஆவுடையார்கோவில் கிழக்கு ஒன்றிய அதிமுக செயலாளரான நரேந்திரஜோதி தரப்பிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்நிலையில் சுரேஷ் நாகுடி போலீசில் அளித்த புகாரில் திருவிடைமருதூர் வழியாக பைக்கில் வந்த தன்னையும், தம்பி சுதர்சன், தாய் இந்திரா ஆகியோரை அதிமுக முன்னாள் எம்எல்ஏ ராஜநாயகம், அவரது தம்பி நரேந்திரஜோதி ஆகியோர் வழிமறித்து தாக்கி, தாய் அணிந்திருந்த தங்க செயினை பறித்து சென்றுவிட்டனர் என கூறியுள்ளார். அதன்பேரில் போலீசார் ராஜநாயகம், நரேந்திரஜோதி ஆகியோர் மீது வழக்குப்பதிந்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று நீதிக்கான மக்கள் இயக்கம் என்ற பெயரில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ ராஜநாயகம், அவரது தம்பி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அறந்தாங்கி பகுதி முழுவதும் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதில் தமிழக அரசே, மாவட்ட ஆட்சியரே, மாவட்ட காவல் கண்காணிப்பாளரே, சட்டமன்ற தேர்தல் காழ்ப்புணர்ச்சி காரணமாக  பைக்கில் சென்ற சுதர்சன், சுரேஷ், இந்திரா ஆகியோரை வழிமறித்து கொலை வெறி தாக்குதல் நடத்திய முன்னாள் எம்எல்ஏ ராஜநாயகம் மற்றும் நரேந்திரஜோதியினரின் கும்பல் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய், உடன் கைது செய். நீதிக்கான மக்கள் இயக்கம், அறந்தாங்கி என அச்சிடப்பட்டுள்ளது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories: