பழநி வையாபுரி குளத்தில் 50 ஏக்கர் நீர்பிடிப்பு பகுதி ஆக்கிரமிப்பு-எல்லைகளை அளக்கும் பணியில் பொதுப்பணித்துறையினர்

பழநி :  பழநி வையாபுரி குளத்தில் சுமார் 50 ஏக்கர் நீர்பிடிப்பு பகுதி ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால், எல்லைகளை அளக்கும் பணியில் பொதுப்பணித்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

பழநி நகரின் மையப்பகுதியில் வையாபுரிக் குளம் உள்ளது. வரதமாநதி அணையில் இருந்து நீர்ப்பாசனம் பெறும் இக்குளத்தின் மொத்த நீர்பிடிப்பரப்பு 297 ஏக்கர் ஆகும். இக்குளத்தின் மூலம் சுமார் 600 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. குளத்தின் நீர்பிடிப்பரப்பில் 5.5 ஏக்கர் பழநி பஸ் நிலைய விரிவாகத்திற்கு வழங்கப்பட்டு விட்டது. எஞ்சிய 292 ஏக்கர் நீர்பிடிப்பரப்பில் தற்போது 240 ஏக்கர் மட்டுமே உள்ளது. சுமார் 50 ஏக்கர் ஆக்கிரமிப்பு நீர்பிடிப்பரப்பு ஆக்கிரமிப்பில் சிக்கி உள்ளதாக தெரிகிறது.  

இந்நிலையில் கடந்த அதிமுக ஆட்சியில் குளத்தின் கரையை உயர்த்தும் பணி துவங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அப்போது வையாபுரி கண்மாய் கரைபத்து புரவு பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் அதன் தலைவர் சந்தானத்துரை மதுரை உயர்நீதி மன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் குளத்தின் நீர்பிடிப்பு பரப்பு ஆக்கிரமிப்பில் சிக்கி உள்ளதாகவும், குளத்தினை எல்லைகளை அளவர்கள் மூலம் அத்துமால் செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.  

இதனைத்தொடர்ந்து நேற்று குளத்தின் கரைகளை அத்துமால் செய்யும் பணி நடந்தது. பொதுப்பணித்துறை அதிகாரிகள் முன்னிலையில் அளவர்கள் மூலம் அத்துமால் செய்யப்பட்டது. ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த வீடுகளின் சுவர்களில் குறியீடு வரையப்பட்டது. ஆக்கிரமிப்பு தொடர்பாக நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்படுமென்றும், நீதிமன்ற வழிகாட்டுதலின்படி அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: