ஆன்லைன் விளையாட்டில் ஆபாசமாக பேசிய விவகாரம் பப்ஜி மதன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது: போலீஸ் கமிஷனர் அதிரடி

சென்னை: ஆன்லைன் விளையாட்டில் ஆபாசமாக பேசிய விவகாரத்தில் கைது செய்து சிறையிலடைக்கப்பட்ட பப்ஜி மதன் மீது, தமிழகம் முழுவதும் தொடர் புகார்கள் வந்தது. இதையடுத்து, போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவுபடி, பப்ஜி மதனை மத்திய குற்றப்பிரிவு போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர். இந்திய அரசால் தடை செய்யப்பட்ட ஆன்லைன் விளையாட்டான ‘பப்ஜி’யை, சேலத்தை சேர்ந்த மதன் (எ) பப்ஜி மதன் என்பவர், தனது யூடியூப் சேனல் மூலம் சட்ட விரோதமாக விளையாடி வந்தார். தனது யூடியூப் பக்கத்தில் பப்ஜி விளையாடுவது குறித்து இளைஞர்களுக்கு பயிற்சி அளித்து வந்தார். அவரது யூடியூப் பக்கத்தை 8 லட்சம் பேர் பின்தொடர்ந்தனர். ஆன்லைனில் பப்ஜி விளையாடும் போது, சிறுவர்கள் மற்றும் பெண்களை இழிவாகவும், ஆபாசமாகவும் பேசி தனது யூடியூப் சேனலில் மதன் பதிவு செய்துள்ளார்.

இதனால் சிறுவர்கள், பெண்கள் பலர் பாதிக்கப்பட்டனர். இதுதொடர்பாக சேலம், திருச்சி, சென்னை என தமிழகம் முழுவதும் மதன் மீது புகார்கள் குவிந்தன. இதற்கிடையே சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மைக்கேல் என்பவர் யூடியூபர் மதன் மீது புகார் அளித்தார். புகாரின் மீது நடவடிக்கை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்படி மத்திய குற்றப்பிரிவு போலீசார் மதன் மீது இந்திய தண்டனை சட்ட பிரிவு 294 (பி), 509 மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டம் 67, 67ஏ ஆகிய 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.

மேலும், இந்த வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த பப்ஜி மதனை தனிப்படை போலீசார் கடந்த 18ம் தேதி தருமபுரியில் பதுங்கியிருந்த போது, போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் ஜாமீன் கோரி மதன் தாக்கல் செய்த மனுவை சில நாட்களுக்கு முன்பு சைதாப்பேட்டை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மீண்டும், சென்னை மாவட்ட செசன்ஸ் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். அந்த மனுவையும் மாவட்ட முதன்மை நீதிபதி செல்வகுமார் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இந்நிலையில் தமிழகம் முழுவதும் மதன் மீது 160க்கும் மேற்பட்ட புகார்கள் குவிந்த நிலையில் மத்திய குற்றப்பிரிவு போலீசார், மதனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவாலுக்கு பரிந்துரை செய்தனர். பின்னர் போலீஸ் கமிஷனர் உத்தரவுபடி மதனை மத்திய குற்றப்பிரிவு போலீசார் நேற்று குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.

* எங்களிடம் இருப்பது ஆடி கார்; சொகுசு கார் இல்லை; பப்ஜி மதன் மனைவி கிருத்திகா பேட்டி

பப்ஜி மதனின் மனைவி கிருத்திகா போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: எனது கணவர் மதன் மீது இதுவரை 4 பேர் தான் புகார் அளித்துள்ளனர். நாங்கள் 2 பங்களா வீடு வைத்திருப்பதாக சொல்கிறார்கள். அது,உண்மையில்லை நாங்கள் வாடகை வீட்டில் தான் இருக்கிறோம். 3 ஆண்டுகளாகத்தான் மதன்  யூடியூப்  சேனல் மூலம் பப்ஜி கேம் விளையாடிக் கொண்டு வருகிறார். அவர் பத்தாண்டில் ஒரு சொத்துகூட வாங்கவில்லை. எங்களிடம் 2 சொகுசு கார்கள் இல்லை; ஒரே ஒரு கார் தான் உள்ளது. அதுவும் ஆடி ஏ6 ரக கார்தான். எங்களிடம் சொகுசு கார் எதுவும் இல்லை.

மதன், தினமும் 20 மணி நேரம் உழைக்கிறார். 4 மணி நேரம் தான் ஓய்வு எடுக்கிறார். அதன் மூலமும், பார்வையாளர்கள் மூலம், சூப்பர் சாட் மூலம் தான் எங்களுக்கு வருவாய் வருகிறது. வேறு எந்த வழியிலும் வருமானம் கிடையாது. இப்போது அவரது பப்ஜி சேனலையும் போலீஸ் முடக்கியுள்ளது. என்னோட வங்கி கணக்கை மற்றும் ஏடிஎம் கார்டுகள் அனைத்தும் போலீசாரிடம் தான் இருக்கிறது. இதனால் எங்களுடையே வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. மதன் அவருடையே யூடியூப் சேனலுக்கு என்னுடைய வங்கி கணக்கை பயன்படுத்தினார். அதுதான் கைதாக காரணம். நான் பப்ஜி கேம் இதுவரை விளையாடியது இல்லை. என்னுடைய குரலும் அந்த கேமில் வந்ததும் இல்லை.

இதுவரை நான் அவருடன் நேரலையில் விளையாடியது கிடையாது. நான் போலீஸ் கமிஷனரை நேரடியாக பார்த்து, எங்கள் மீது 200 புகார்கள் என்று சொல்கிறார்கள். இதனால்  அந்த 200 புகார் அளித்த நபர்கள் யார் என்று சொன்னால் நன்றாக இருக்கும் என்பதை கேட்கத்தான் வந்தேன். அதற்கு முன்பாக மதன் மீது குண்டாஸ் போட்டதாக சொல்கிறார்கள். சரியான வழக்கு இல்லாத போது எப்படி குண்டாஸ் போட்டார்கள் என்று இன்று வரை எனக்கு தெரியவில்லை. அதை நாங்கள் சட்ட ரீதியாக எதிர்கொள்கிறோம். பணம் ஏமாற்றிவிட்டதாக சொல்கிறார்கள். இதுவரைக்கும் யாரும் பணம் கொடுத்ததாக புகார் அளிக்கவில்லை. எனது கணவரை விளையாட்டின் போது அந்த 4 பேர் கோபம் உண்டாக்கி அதன் மூலம் பேச வைக்கிறார்கள். அதில் பல சித்தரிக்கப்பட்டவை. இதுகுறித்த சட்ட ரீதியாக நாங்கள் எதிர்கொள்ள இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: