டெல்லி திகார் சிறையிலிருந்து ஐ.எஸ்.ஆதரவாளர் காஜாமொய்தீன் பூந்தமல்லி சிறைக்கு மாற்றம்

சென்னை:கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை சோதனைச் சாவடியில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் கொலை, அம்பத்தூர் இந்து அமைப்பு பிரமுகர் சுரேஷ்குமார் கொலை வழக்கு, ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புக்கு நிதி திரட்டியது உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்புடையவர் காஜாமொய்தீன். ஐஎஸ் அமைப்பின் ஆதரவாளரான இவரை பல்வேறு வழக்குகள் தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை போலீஸ் (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்குகளின் விசாரணை பூந்தமல்லி தேசிய புலணாய்வு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இதற்கிடையே ஜாமினில் வெளியே வந்த அவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு டெல்லிக்கு சென்றபோது வேறொரு வழக்கு தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்து திகார் சிறையில் அடைத்தனர்.

இதனால் பூந்தமல்லியில் உள்ள தேசிய புலனாய்வு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள வழக்குகளில் அவர் ஆஜராவதில் சிக்கல் ஏற்பட்டது.  இந்தநிலையில் தற்போது பூந்தமல்லியில் உள்ள தேசிய புலனாய்வு சிறப்பு நீதிமன்றத்திற்கு புதியதாக நீதிபதி வேல்முருகன் நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து உச்சநீதிமன்ற உத்தரவுப்படி வழக்கை துரிதமாக முடிக்க வேண்டும் என்ற காரணத்திற்காக திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள காஜாமொய்தீனை பூந்தமல்லி சிறைக்கு மாற்ற வேண்டும் என திகார் சிறை துறைக்கு நீதிபதி வேல்முருகன் கடிதம் அனுப்பியிருந்தார்.

இந்நிலையில், திகார் சிறையிலிருந்து போலீஸ் பாதுகாப்புடன் காஜாமொய்தீனை அழைத்து வரப்பட்டு, பூந்தமல்லியில் உள்ள தேசிய புலனாய்வு  நீதிமன்றத்தில் நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்து அவரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டதைத் தொடர்ந்து அவர் பூந்தமல்லியில் உள்ள தனி கிளை  சிறையில் அடைக்கப்பட்டார்.

Related Stories: