கர்நாடகா அரசு தமிழகத்தின் அனுமதி இல்லாமல் மேகதாதுவில் அணை கட்ட முடியாது: டெல்லியில் அமைச்சர் துரைமுருகனிடம் ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சர் உறுதி

புதுடெல்லி: ‘தமிழக அரசின் அனுமதி இல்லாமல் மேகதாதுவில் கர்நாடகா அரசு அணை கட்ட முடியாது. முதல்நிலை திட்ட ஆய்வறிக்கைக்கு அனுமதி வழங்கி இருப்பதால் மட்டுமே அதை முழுமையாக செயல்படுத்தி விட முடியாது,’ என தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனிடம் ஒன்றிய ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத் உறுதியாக தெரிவித்துள்ளார். காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் புதிய அணை கட்டுவதற்கு கர்நாடகா அரசு முயற்சி செய்து வருகிறது. இதற்கு  தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இது தொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கர்நாடக முதல்வர் எடியூரப்பாவுக்கு எழுதிய கடிதத்தில், ‘மேகதாதுவில் அணை கட்டுவதை ஏற்க முடியாது,’ என திட்டவட்டமாக தெரிவித்திருந்தார். இந்நிலையில், தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் டெல்லியில் நேற்று ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத்தை அவரது அலுவலகத்தில் சந்தித்து பேசினார். இதில், மேகதாது அணை பிரச்னை முக்கிய இடம் பெற்றது. பொதுப்பணித் துறை கூடுதல் தலைமை செயலாளர் சந்திப் சக்சேனா, காவிரி தொழில்நுட்பக் குழு தலைவர் சுப்ரமணியனும் உடனிருந்தனர்.

பின்னர், தமிழ்நாடு இல்லத்தில் அமைச்சர் துரைமுருகன் அளித்த பேட்டியில் கூறியதாவது: ஒன்றிய அமைச்சர் உடனான சந்திப்பு மிகவும் சுமூகமாக இருந்தது. தமிழகத்தின் நீர் பங்கீடு சார்ந்த அனைத்து பிரச்னைகள் குறித்தும் தீவிரமாக இந்த சந்திப்பின் போது ஆலோசிக்கப்பட்டது. தமிழகம் சார்ந்த பிரச்னைகளை முன்கூட்டியே ஒன்றிய  அமைச்சர் தெளிவாக புரிந்து வைத்திருந்தார். 25 நிமிடம் நடந்த இந்த சந்திப்பின் போது, ‘உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்படையில் காவிரியில் இருந்து தமிழகத்திற்கு நீர் வழங்க வேண்டும். இந்தாண்டு ஜூன், ஜூலைக்கான 5.67 டிஎம்சி தண்ணீரை கர்நாடகா வழங்காமல் உள்ளது. அதனால், தேவையான இந்த நேரத்தில் தண்ணீரை திறந்து விட கர்நாடகாவிற்கு உத்தரவிட வேண்டும்,’ என அவரிடம் வலியுறுத்தப்பட்டது.

மேலும், மேகதாது அணை விவகாரத்தில் டிபிஆர் எனப்படும் கர்நாடகாவின் முதல் நிலை திட்ட ஆய்வறிக்கைக்கு ஒன்றிய அரசு அனுமதி வழங்கியது சரியல்ல என்றும் அவரிடம் கூறப்பட்டது. அதற்கு அவர், ‘முதல்நிலை திட்ட ஆய்வறிக்கைக்கு அனுமதி வழங்கியதால் மட்டுமே காவிரியின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடகா அணை கட்டிவிட முடியாது. தமிழகத்தின் அனுமதி இல்லாமல் கண்டிப்பாக மேகதாதுவில் கர்நாடகாவால் அணை கட்ட முடியாது. ஒன்றிய அரசும் அதற்கு அனுமதிக்காது. ஏற்கனவே பல்வேறு திட்டங்களுக்கு இதுபோன்று முதல்நிலை திட்ட ஆய்வறிக்கைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஆனால், ஒருபோதும் அந்த திட்டங்கள் அனைத்தும் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை. மேகதாது விவகாரத்தில் தமிழக அரசு எந்தவிதமான அச்சமும் கொள்ள தேவையில்லை,’ என உறுதி அளித்துள்ளார். காவிரி நீர் மேலாண்மை ஆணையத்துக்கு என நிரந்தர தலைவரை நியமிக்க வேண்டும் எனவும் அவரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. மேலும், நதிநீர் இணைப்புத் திட்டத்தில் காவிரி-குண்டாலாறு-வைப்பாறு நதிகளை இணைக்க, தமிழக அரசுக்கும் போதிய நிதியை வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டு இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

* முல்லை பெரியாறில் பேபி அணை

அமைச்சர் துரைமுருகன் தனது பேட்டியில், ‘முல்லைப் பெரியாறு அணையின் அருகே துணை அணை (பேபி) கட்ட அனுமதிக்க வேண்டும். இதற்கு அனுமதி அளிக்கப்பட்டால், தற்போது 142 அடியாக இருக்கும் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த முடியும். ஆனால், அந்த பகுதியில் இருக்கும் ஒரு சில மரங்கள் வெட்டப்படுவதை காரணம் காட்டி, கேரள அரசு இத்திட்டத்துக்கு அனுமதிக்க மறுக்கிறது. இதில், ஒன்றிய ஜல் சக்தி துறை தலையிட்டு சுமூக தீர்வை மேற்கொண்டு துணை அணையை கட்ட அனுமதிக்க வேண்டும். அதோடு,  முல்லைப் பெரியாறு அணையின் மொத்த நிர்வாகத்தையும் எப்போதும் கேரள மாநில  அரசிடமே இருக்க விடக்கூடாது என மனு கொடுக்கப்பட்டு உள்ளது,’ என்றார்.

Related Stories: