ஒரு கோடி சப்ஸ்கிரைபர் பெற்ற நிலையில், கொரோனா நிவாரண நிதிக்கு ரூ. 10 லட்சம் வழங்கிய வில்லேஜ் குக்கிங் சேனல் :ராகுல் காந்தி வாழ்த்து!!

சென்னை: வில்லேஜ் குக்கிங் சேனல் என்ற யூடியூப் சேனல் ஒரு கோடி சந்தாதாரர்களுடன் தென்னிந்தியாவில் முதல் டைமண்ட் பட்டன் எனும் அங்கீகாரத்தையும் யூடியூபிடம் இருந்து பெற்றுள்ளது. புதுக்கோட்டையைச் சேர்ந்த 6 பேரைக் கொண்ட குழுவினரின் வில்லேஜ் குக்கிங் சேனல் .வருடத்தில் 6 மாதம் விவசாய தொழில் புரிந்து விட்டு மீதமுள்ள 6 மாதங்களில் கிடைத்த வேலைகளைச் செய்து வந்த இக்குழுவின் இளைஞர்கள் சோதனை முறையில் முதல் முறையாக 2018-ம் ஆண்டு யூடியூப் சேனலை தொடங்கி சமையல் செய்யும் வீடியோக்களை பதிவிடத் தொடங்கினர். பெரிய தம்பி என்னும் பெரியவரே இக்குழுவின் காட் ஃபாதர். சமையல் வீடியோக்களை பகிரும் பல்லாயிரக்கணக்கான சேனல்களுக்கு மத்தியில் கிராமத்து இளைஞர்களின் வெகுளியான பேச்சு, மண் மணம் மாறாத பாரம்பரிய சமையல் முறை, திறந்த வெளியில் பிரமாண்ட அளவில் சமையல் செய்வது உள்ளிட்டவற்றால் உலகளவில் ஒரு கோடி ரசிகர்களின் மனங்களை வென்றுள்ளனர். தமிழகத்திற்கு தேர்தல் பரப்புரை மேற்கொள்ள வந்த காங்கிரஸ் கட்சியின் எம்.பி ராகுல்காந்தியே நேரில் சென்று இவர்களை வாழ்த்தும் அளவிற்கு பிரபலமடைந்தனர்.

கடந்த பிப்ரவரி மாதம் சிறந்த சமையல் நிகழ்ச்சிக்கான பிளாக் ஷீப் விருதையும் இந்த குழுவினர் பெற்றனர்.இந்நிலையில் சேனல் தொடங்கிய மூன்றே ஆண்டுகளில் ஒரு கோடி சப்ஸ்க்ரைபர்களைக் கடந்து யூடியூப் நிறுவனத்தின் டைமண்ட் பட்டன் அங்கீகாரம் பெற்ற முதல் தமிழ் சேனல் என்ற பெருமையைப் பெற்றுள்ளது வில்லேஜ் குக்கிங் சேனல். இக்குழுவினர், யூடியூப் மூலம் பெற்ற வருவாயில் 10 லட்ச ரூபாயை கொரோனா நிவாரண நிதியாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கியுள்ளனர்.

ராகுல் காந்தி வாழ்த்து!!

காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், வில்லேஜ் குக்கிங் சேனல் அடைந்த உயரத்திற்கு எனது இதயப்பூர்வமான வாழ்த்துக்கள். தமிழ்நாடு அரசுக்கு கொரோனா நிவாரணமாக தங்களது பங்களிப்பை அளித்ததற்கும் வாழ்த்துக்கள். மீண்டும் உங்களை சந்திப்பதை எதிர்நோக்கியுள்ளேன், என்று தெரிவித்துள்ளார்.

Related Stories: