மார்கண்டேய நதியின் குறுக்கே கர்நாடகா கட்டிய அணையை இடிக்க வலியுறுத்த வேண்டும்: ஒன்றிய அரசுக்கு பி.ஆர்.பாண்டியன் கோரிக்கை

கிருஷ்ணகிரி: தமிழகத்தில் கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி மாநிலத்திற்கு குடிநீர் ஆதாரமாகவும், பாசன நீராகவும் விளங்கும் தென்பெண்ணை ஆற்றின் துணை நதியான மார்கண்டேய நதியில், கர்நாடக அரசு சட்டத்திற்கு புறம்பாக உயர்மட்ட தடுப்பணையை கட்டி உள்ளது. இதை கண்டித்தும், கர்நாடகாவிற்கு துணை போகும் ஒன்றிய அரசை கண்டித்தும், கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற தமிழக அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் அளித்த பேட்டி:  மத்திய அரசு தமிழகத்துக்கு எதிராக அண்டை மாநிலங்களை தூண்டி விடுகிறது. கர்நாடக அரசு, மார்க்கண்டேய நதியில், படுக்கை அணை என்ற பெயரில் 50 மீட்டர் உயரத்தில் வானுயர்ந்த தடுப்பணையை சட்டவிரோதமாக கட்டியிருக்கிறது.

மழை வெள்ள காலங்களில் இந்த அணையால் தமிழகம் மட்டுமின்றி, கர்நாடக விவசாயிகளும் பேரழிவை சந்திப்பார்கள். இப்படி தடுப்பணை கட்டி இருப்பது உச்ச நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல். இதில் தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும். இந்த அணையை இடிக்க, கர்நாடக அரசை ஒன்றிய அரசு வலியுறுத்த வேண்டும். மறுத்தால் தமிழக விவசாயிகள் கர்நாடக விவசாயிகளோடு கலந்து பேசி, அணையை உடைத்தெறிய தயங்க மாட்டோம். உச்சநீதிமன்றம் ஒரு உயர்மட்ட குழுவை அனுப்பி, தானே வழக்கு பதிந்து தமிழகத்திற்கு எதிரான நீராதார பிரச்னைகள் குறித்து நீதி வழங்க முன்வர வேண்டும் என்றார்.

Related Stories: