எஸ்பிஐ டெபாசிட் இயந்திரத்தில் திருடிய விவகாரம் கோடிக்கணக்கில் கொள்ளையடித்த பணத்தை போட பயன்படுத்திய 30 வங்கி கணக்குகள் முடக்கம்: சவுகாத் அலிக்கு 7 நாள் போலீஸ் காவல் கேட்டு போலீஸ் மனு

சென்னை: எஸ்பிஐ டெபாசிட் இயந்திரத்தில் நூதன முறையில் திருடிய விவகாரத்தில், கொள்ளையர்கள் பயன்படுத்தி வந்த 30 வங்கி கணக்குகளை போலீசார் முடக்கி உள்ளனர். மேலும், முக்கிய குற்றவாளியான சவுகாத் அலியை 7 நாள் காவலில் விசாரணை நடத்த போலீசார் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். சென்னையில் எஸ்பிஐ வங்கிக்கு சொந்தமான விருகம்பாக்கம், வேளச்சேரி, தரமணி, வடபழனி உள்ளிட்ட 15 இடங்களில் உள்ள கிளையில் அமைக்கப்பட்டுள்ள ஜப்பானில் தயாரான டெபாசிட் இயந்திரத்தில் இருந்து மட்டும் ரூ.45 லட்சம் மாயமானது.

இதுகுறித்து எஸ்பிஐ வங்கி அதிகாரிகள் அளித்த புகாரின்படி கூடுதல் கமிஷனர் கண்ணன் மற்றும் தி.நகர் துணை கமிஷனர் அரிகிரன் பிரசாத் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர், அரியானா சென்று பல்வேறு முயற்சிகளுக்கு பிறகு ஏடிஎம் டெபாசிட் இயந்திரத்தில் நூதன திருட்டில் ஈடுபட்ட அமீர் அர்ஷ்(27), வீரேந்திர ராவத்(23), நஜிம் உசேன்(25), கவுகத் அலி ஆகிய 4 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து இதுவரை ரூ.4.50 லட்சம் பணம், கார், 4 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கைதான 4 பேரும் ஒரே கிராமத்தை சேர்ந்தவர்கள் இவர்கள் தமிழகம் முழுவதும் 21 இடங்களில் இந்த கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் தனித்தனியாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது கைது செய்யப்பட்டுள்ள சவுகத் அலியை 7 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்த நீதிமன்றத்தில் பெரியமேடு போலீசார் நேற்று மனு தாக்கல் செய்துள்ளனர்.

இதற்கிடையே எஸ்பிஐ வங்கியின் டெபாசிட் இயந்திரத்தில் நூதன கொள்ளையில் ஈடுபட்டு கிடைத்த பல கோடி பணத்தை பல்வேறு வங்கிக் கணக்குகளில் டெபாசிட் செய்துள்ளனர். அந்த வகையில், கொள்ளையடிக்கப்பட்ட பணம் உள்ள 30 வங்கி கணக்குகளை போலீசார் முடக்கி உள்ளனர். மேலும், கொள்ளைக்கு பயன்படுத்திய ஏடிஎம் கார்டுகளை கொள்ளையர்கள் பணத்தை திருடிய உடன் அந்த ஏடிஎம் கார்டுகளை உடைத்து விடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். கைது செய்யப்பட்டள்ள சவுகத் அலி 3 பேரின் குழுவின் தலைவனாக செயல்பட்டு வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனால் காவலில் எடுத்து விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். அதேநேரம், இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள 5 பேர் கொண்ட கும்பலை பிடிக்க தனிப்படை போலீசார் தொடர்ந்து அரியானாவில் முகாமிட்டுள்ளனர்.

Related Stories: