முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் மகன் திரிணாமுல் கட்சிக்கு தாவல்

புதுடெல்லி: முன்னாள் ஜானதிபதி பிரணாப் முகர்ஜியின் மகன் அபிஜித் முகர்ஜி காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி திரிணாமுல் கட்சியில் இணைந்தார்.  மேற்கு வங்கத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலுக்கு முன் திரிணாமுல், காங்கிரஸ் கட்சியில் இருந்து அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், நிர்வாகிகள் ஆகியோர் பாஜவுக்கு தாவினர். இதனால், நடந்து முடிந்த தேர்தலில் பாஜ எதிர்கட்சி அந்தஸ்தை பெற்றது. தேர்தல் முடிந்த பின் திரிணாமுல் கட்சியில் இருந்து பாஜவுக்கு தாவிய முகுல் ராய், மீண்டும் மம்தா முன்னிலையில் கட்சியில் இணைந்தார். இதனால், மம்தாவின் அரசியல் ஆட்டம் தொடங்கி விட்டதாக தகவல்கள் பரவியது. மேலும், வரும் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் 2026ல் நடக்கும் சட்டப்பேரவை தேர்தலுக்கான வேலைகளில் இப்போதே மம்தா தீவிரமாக செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் மகனும், காங்கிரஸ் கட்சியின் மாஜி எம்பியுமான அபிஜித் முகர்ஜி, திரிணாமுல் கட்சியில் இணைய போவதாக கடந்த சில வாரங்களாக தகவல்கள் கசிந்தது. இந்த சூழலில், நேற்று மாலை திரிணாமுல் கட்சியின் மூத்த தலைவர்கள் முன்னிலையில் அபிஜித் முகர்ஜி அக்கட்சியில் இணைந்தார். பின்னர் அபிஜித் முகர்ஜி கூறுகையில், ‘‘மேற்கு வங்கத்தில்  பாஜவின் வளர்ச்சியை நிறுத்துவதில் மம்தா வெற்றி பெற்றுள்ளார். அவர்  நாட்டின் மிகவும் நம்பகமான மதச்சார்பற்ற தலைவர்’’ என்றார்.

Related Stories: