ஊட்டி அரசு மருத்துவமனை வளாகத்தில் ஒரு நிமிடத்தில் 1000 லிட்டர் ஆக்சிஜன் உற்பத்தி மைய பணிகள் தீவிரம்

ஊட்டி : ஊட்டி அரசு மருத்துவமனை வளாகத்தில் 1 நிமிடத்தில் 1000 லிட்டர் திரவ ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் மைய பணிகள் நடைபெற்று வருகிறது. ஊட்டி அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் ரூ.45 லட்சம் மதிப்பில் 6 கேஎல்டி ஆக்சிஜன் டேங்க் அமைக்கப்பட்டு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு ஆக்சிஜன் தேவை என்ற நிலையில் உள்ளவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நீலகிரி, பெரம்பலூர் மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது.

அதன்படி, ஊட்டி அரசு மருத்துவமனை வளாகத்தில் ஆக்சிஜன் உற்பத்தி மையம் அமைக்கப்பட்டு வருகிறது. தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மூலம் இப்பணிகள் நடைபெற்று வருகிறது. சென்னையில் இருந்து இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டு பொருத்தப்பட்டுள்ளது. இந்த புதிய பிளாண்ட் மூலம் 1 நிமிடத்திற்கு 1000 லிட்டர் திரவ ஆக்சிஜன் உற்பத்தி செய்ய முடியும்.

இதனை சேமித்து வைக்க முடியாது. நேரடியாக குழாய்கள் மூலம் ஆக்சிஜன் தேவைப்படும் நோயாளிகளுக்கு பயன்படுத்தலாம். கொரோனா காலம் மட்டுமின்றி பிற அவசர மருத்துவ தேவைகளுக்கும் பயன்படுத்தி கொள்ள முடியும் என சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.

Related Stories: