புதிய முதல்வராக புஷ்கர் சிங் தாமி பதவியேற்கும் முன்பாகவே உத்தரகாண்ட் பாஜ.வில் போர்க்கொடி: வீடு வீடாக சென்று சமாதானப்படுத்திய தலைவர்கள்

டேராடூன்: உத்தரக்காண்ட் மாநிலத்தின் 11வது முதல்வராக புஷ்கர் சிங் தாமி நேற்று பதவியேற்று கொண்டனர். அவருக்கு எதிராக பாஜ எம்எல்ஏக்கள் போர்க்கொடி தூக்கி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உத்ததரக்காண்ட் மாநிலத்தில் கடந்த 2017ம் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் பாஜ வெற்றி பெற்று, அம்மாநில முதல்வராக திரிவேந்திர சிங் ராவத் பதவியேற்றார். அவருக்கு எதிராக சில எம்எல்ஏ.க்கள் போர்க்கொடி தூக்கியதால் கடந்த மார்ச் மாதம் ராஜினாமா செய்தார். இதன் பிறகு, மக்களவை எம்பி.யாக இருந்த தீரத் சிங் ராவத், மார்ச் 10ம் தேதி முதல்வராக பதவியேற்றார்.

எம்எல்ஏ.வாக இல்லாத தீரத் சிங், வரும் செப்டம்பருக்குள் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏ.வாக தேர்வு செய்யப்பட வேண்டும் என்பது விதிமுறை. உத்தரக்காண்டில் அடுத்தாண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதாலும், கொரோனா பரவல் காரணமாகவும் இடைத்தேர்தல் நடத்த தலைமை தேர்தல் ஆணையம் தயாராக இல்லை. இதனால், முதல்வர் தீரத் சிங் வரும் செப்டம்பருக்குள் எம்எல்ஏவாக தேர்வாக முடியாத நிலை ஏற்பட்டது.

ஒரு பக்கம் எம்எல்ஏக்கள் சிலர் அவருக்கு எதிராக போர்க்கொடி தூக்கியதால் முதல்வர் பதவியில் நீடிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால், கடந்த 2ம் தேதி இரவு அவர் ராஜினாமா செய்தார்.

இதையடுத்து, புதிய முதல்வரை தேர்ந்தெடுப்பதற்காக பாஜ எம்எல்ஏ.க்கள் கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில், மூத்த தலைவர்கள் உட்பட 12க்கும் மேற்பட்ட பெயர்கள் பரிசீலிக்கப்பட்ட நிலையில், யாரும் எதிர்பார்க்காத நிலையில் மாநிலத்தில் இளம் முதல்வராக புஷ்கர் சிங் தாமி (45) ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். அமைச்சர் பதவி அனுபவம் கூட இல்லாத தாமி, முதல்வராக தேர்வு செய்யப்பட்டதில் மூத்த அமைச்சர்கள் சத்பால் மகாராஜ், ஹரக் சிங் ராவத் உள்ளிட்ட சில தலைவர்கள் மற்றும் பிஷான் சிங் சுபால், யஷ்பால் ஆர்யா, சுபோத் யூனியல் போன்ற சில எம்.எல்.ஏக்களும் அதிருப்தி அடைந்ததாக கூறப்படுகிறது.

இதனால், உத்தரகண்ட் மாநில முதல்வராக பதவியேற்பதற்கு முன்னதாக புஷ்கர் சிங், அதிருப்தியில் இருந்த மூத்த பாஜ தலைவர்களை சந்தித்து பேசினார். குறிப்பாக, முதல்வராக தேர்தெடுக்கப்பட்டவுடன், எம்எல்ஏக்கள் கூட்டத்தில் இருந்து முதல் ஆளாக வெளியேறிய மூத்த அமைச்சர் சத்பால் மகாராஜை அவரது வீட்டில் சந்தித்து புஜ்கர்சிங் பேசினார். அதே நேரத்தில், அதிருப்தி தலைவர்கள் முதல்வர் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ளவில்லை என தகவல் கசிந்ததால், பாஜ மாநில தலைவர் மதன் கவுசிக், மாநில பொறுப்பாளர் துஷ்யந்த் குமார் ஆகியோர்  அதிருப்தி தலைவர்களை, அவர்களின் வீட்டுக்கே சென்று சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். உட்கட்சி பூசல் காரணமாக ஏற்கனவே இரண்டு முதல்வர்கள் பதவி விலகி உள்ள நிலையில், தற்போது புதிய முதல்வர் பதவியேற்பதற்கு முன்பு உட்கட்சி பூசல் தலை தூக்கி உள்ளது தேசிய தலைமைக்கு தலைவலியை ஏற்படுத்தி உள்ளது.

* 11 அமைச்சர்களுடன் புஷ்கர் பதவியேற்பு

டேராடூனில் உள்ள ராஜ்பவனில் உத்தரக்காண்ட் மாநிலத்தின் 11வது முதல்வராக புஷ்கர் சிங் தாமி நேற்று மாலை பொறுப்பேற்று கொண்டார். அவருக்கு ஆளுநர் பேபி ராணி மவுரியா பதவி பிரமாணம் செய்து வைத்தார். அவருடன் சத்பால் மகாராஜ், ஹரக் சிங் ராவத், பன்சிதர் பகத், யஷ்பால் ஆர்யா, பிஷன் சிங் சுபால், சுபோத் யூனியல், அரவிந்த் பாண்டே, கணேஷ் ஜோஷி, தன் சிங் ராவத், ரேகா ஆர்யா, சுவாமி யதிஸ்வரானந்த் ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்றனர். முதல்வராக பதவியேற்ற தாமிக்கு, பிரதமர் மோடி டிவிட்டர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

* ஆர்எஸ்எஸ் ஆதரவாளர்

முதல்வராக புஷ்கர்சிங் தாமி தேர்தெடுக்கப்பட்டது, அனைவரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது. காரணம், அமைச்சர் அனுபவம் கூட இல்லாத ஒருவரை எப்படி பாஜ தேசிய தலைமை முதல்வராக தேர்தெடுத்தது என்று கேள்வி எழுந்துள்ளது. முதல்வர் புஷ்கர்சிங் தாமி தீவிர ஆர்எஸ்எஸ் ஆதரவாளர். நீண்டகாலம் ஆர்எஸ்எஸ்.சில் செயல்பட்டவர்.

Related Stories: